
8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற வழி செய்யும் சட்ட மசோதா சட்டப் பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுகவிற்கு 125 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் நிலையில் 4 மதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டவர்கள், வேல்முருகன் கொங்கு ஈஸ்வரன் போன்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்யவில்லை. மொத்த சட்டமன்ற உறுப்பினர்களில் பாதியளவு (118) இருந்தாலே சட்ட மசோதா நிறைவேற்றப்படும் என்ற நிலையில் 125க்கும் மேற்பட்டோர் இருந்தது மசோதா நிறைவேறக் காரணமாக அமைந்தது.
பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் சிபிஎம், சிபிஐ, விசிக போன்ற கட்சிகள் வெளிநடப்பு செய்தன. மேலும் இதுகுறித்து பேசிய அமைச்சர் சி.வி.கணேசன் தொழிலாளர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாத வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் சி.வி.கணேசன், “இது தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டத்திருத்தம் அல்ல. எந்த ஒரு தொழிலாளர்களின் விருப்பத்திற்கு மாறாக கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தம் அல்ல. வாரத்திற்கு 48 மணி நேரப் பணி தொடர்ந்து நீடிக்கும். இருக்கும் வரைமுறைகள் நிலைகள் எந்தவித மாற்றமும் இல்லை. விரும்புகிற நிறுவனங்கள் அரசாங்கத்துடன் பரிசீலனை செய்த பின்பே நிறைவேற்றப்படும். அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தாது.
தொழிலாளர்களின் எதிர்ப்புகளை இது நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது. நிறுவனங்கள் விரும்பினால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறே நடைமுறைப்படுத்தப்படும்.
65A சட்ட திருத்தம், உலகலாவிய சூழ்நிலையில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் நெகிழ்வுத் தன்மை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே இம்முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. உதாரணமாக மின்னணுவியல் நிறுவனங்கள், தோல் அல்லாத காலணிகள் செய்யும் போன்ற நிறுவனங்கள் அவர்களாக விரும்பினால் இதை ஒரு தேர்வாக அவர்கள் எடுத்துக் கொள்ளலாம். வாரத்தில் இருக்கும் ஒட்டுமொத்த வேலை மணி நேரங்கள் மாறாது. இம்முறையில் வாரத்தில் 3 நாட்கள் அவர்கள் ஓய்வெடுத்துக் கொள்ளலாம்” எனக் கூறினர்.