இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளைக் கொடுத்திருந்தது. அதன்படி கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர்கள் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர்களான திருச்சி சிவா, ஆ. ராசா மற்றும் பொன்முடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதனையடுத்து நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரி கட்சிகள் முதற்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் வரும் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 தொகுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தனர்.
இந்த கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம், தேர்தல் அறிக்கைகள் தயாரிப்பது, வேட்பாளர்களை தேர்வு செய்தல் குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளையும், ராஜ்யசபா இடங்களையும் இடதுசாரி கட்சிகள் திமுகவிடம் ஒதுக்க கோரிக்கை வைத்திருந்த நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.