Skip to main content

மோடி அரசின் மக்கள் விரோத சட்டங்கள்! கருப்புகொடி போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி!  

Published on 27/07/2020 | Edited on 27/07/2020
kunangudi R.M Haniba - Manithaneya Makkal Katchi

 

 

பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை பாதிக்கும் வகையில், மத்திய அரசு கொண்டு வரும் புதிய சட்டங்களை எதிர்த்து இன்று (27-ந் தேதி) நாடு முழுவதும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருக்கின்றன.

 

இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்ததுடன் மனித நேய மக்கள் கட்சியினர் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என அறிவித்திருந்தார் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா! அதன்படி தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியிருக்கிறார்கள் மனிதநேய மக்கள் கட்சியினர்.

 

தனது வீட்டில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தின் காரணங்களை வலியுறுத்தி பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம்.அனிபாவிடம் நாம் பேசியபோது, “கரோனா தொற்று பரவலால் நடைமுறைப்படுத்தியுள்ள பொது முடக்கத்தப் பயன்படுத்தி மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வருவதை தொடர்ச்சியாக செய்து வருகிறது மத்திய பாஜக அரசு.

 

மின்சார திருத்த சட்டம், அத்யாவசிய பொருட்கள் திருத்த சட்டம், வேளாண் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் ஆகிய சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய பாஜக அரசு கொண்டு வருகிறது. இந்த சட்டங்கள் அனைத்துமே மக்களுக்கு விரோதமானவை, இவைகள் கண்டிக்கப்பட வேண்டிய சட்டங்கள். இவைகளை எதிர்த்துதான் கருப்பு கொடி போராட்டம் நடக்கிறது.

 

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாவின் அறிவுறுத்தலின்படி, போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறோம். விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்புகளிலிருந்து நாம் விலகி போனால் நாடு சுடுகாடாகி விடும். மத்திய பாஜக அரசு கொண்டு வரும் இத்தகைய கருப்பு சட்டங்களை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டிய கடமை ஜனநாயக சக்திகளுக்கு இருக்கிறது. அதனால்தான், இந்த சட்டங்களை எதிர்த்து மனிதநேய கட்சி கருப்பு கொடி ஏற்றி போராடுகிறது” என்கிறார் ஆவேசமாக.

 

 

சார்ந்த செய்திகள்