கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில், அமமுக சார்பில் அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், இன்று காலை டிடிவி தினகரன் கோவில்பட்டியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
தினகரனுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்று அமமுகவினரிடம் கேட்டோம். அப்போது அவர்கள், சென்னையில் நடந்த அமமுக தேர்தல் அறிக்கை வெளியீடு கூட்டத்தில் பேசிய அமமுக தேர்தல் பிரிவுச் செயலாளர் மாணிக்க ராஜா உரையாற்றும்போதே சொல்லிவிட்டார்.
என்னவென்றால், ''டிடிவி தினகரன் கோவில்பட்டியில் போட்டியிடுகிறார். டிடிவி தினகரன் கோவில்பட்டியில் நிற்கிறார் என்று செய்திகள் வெளியானவுடன், தமிழகத்தில் முதலில் தோற்கப்போகும் அமைச்சர் கடம்பூர் ராஜு என்று செய்திகள் பரவியது. டிடிவி தினகரன், 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அவர் வெற்றி பெறுவார் என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்று. அங்கு போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள்.
234 தொகுதிகளில் கோவில்பட்டியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றால் அதற்கான உழைப்பை நாங்கள் கொடுத்து வெற்றிபெறச் செய்வோம். எந்த சின்னத்தைக் கொடுத்தாலும் எதிரிகளை விரட்டி அடிப்பவர் டிடிவி தினகரன்'' எனக் கூறியுள்ளார். கடம்பூர் ராஜு தோல்வியடைவது உறுதி. 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றி பெறுவதும் உறுதி என்றனர்.