உள்ளாட்சித் தேர்தல் களம் வெப்பத்தின் கொள்ளளவையும் தாண்டி தகிக்கிறது. சட்டமன்றத் தேர்தலைவிட கரன்சிகள் காற்றாய் பறக்கின்றன. பல்வேறு ஊராட்சிப் பகுதிகளில் வேட்பாளர்களின் போட்டியால் வாக்குகள் ஏலம் போகுமளவுக்கு நிலைமைகள் எட்டியுள்ளன.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ளாட்சி வாக்குப்பதிவுகள் 6, மற்றும் 9ஆம் தேதி என இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. இதில் ஊராட்சி வார்டு, ஒன்றிய வார்டு கவுன்சிலர்களைவிட ஊராட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதில்தான் கட்சிகள், வேட்பாளர்களிடையே கடும் போட்டி. இந்தப் போட்டிகளே வோட்டுக்கான ரூபாயின் எண்ணிக்கையை ஏல முறை அளவுக்குக் கொண்டு போயிருக்கிறது.
தென்காசி மாவட்டத்தின் பாவூர்சத்திரம் பலதரப்பான வியாபாரங்களைக் கொண்ட முன்னணி ஊராட்சி. இதன் தலைவர் பதவி பெண்களுக்கானது. களத்தில் முக்கிய மூன்று வேட்பாளர்களின் போட்டி என்றாலும், மணிவண்ணன், மதிசெல்வன், இளங்கோ மூவரின் சார்பில் அவர்களின் மனைவியர் களத்தின் வேட்பாளர்கள். மூன்று பேருமே திமுகவைச் சார்ந்தவர்கள். இவர்களில் மணிவண்ணன் அதிமுகவிலிருந்து திமுகவின் பக்கம் வந்தவர்.
எப்படியும் தங்கள் சார்ந்தவரைத் தலைவியாக்கிவிட வேண்டும் என்ற தீவிரத்தில் ஆரம்பத்தில் தெரிந்தும் தெரியாமலும் வாக்காளர்களுக்கு சப்ளை செய்ய, மற்றவர்களும் போட்டியாக சப்ளை செய்தனர். இதற்கு சற்றும் சளைத்ததாகத் தெரியவில்லை, அருகிலுள்ள கல்லூரணி பஞ்சாயத்தில் நடந்தவை. இந்த ஊராட்சிக்குரியத் தலைவர் பதவிக்கு ஐந்து வேட்பாளர்கள் மோதுகின்றனர். போட்டி அனல் தெறித்தாலும் ‘டப்பு’ இல்லாமல் வேலையாகாது என அங்கேயும் கரன்சி மழை பொழிந்தது. குற்றாலம் பக்கம் உள்ள ஆயிரப்பேரியில் கரன்சி சப்ளை நடந்துள்ளது.
மாவட்டத்தின் மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் வைட்டமின் பட்டுவாடாவில் மாறுபட்ட அணுகுமுறையாம். இங்கே ஊராட்சித் தலைவர் பதவியைப் பிடிப்பதைவிட வலுவான மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதில்தான் அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கிடையே இழுபறி இருக்கிறதாம்.
நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி பக்கமுள்ள மறுகால்குறிச்சி ஊராட்சித் தலைவர் பதவிக்கும் நாங்குநேரி யூனியனுக்குட்பட்ட வடுகட்சிமதில் ஊராட்சித் தலைவர் பதவிக்கும் அரியகுளம் ஊராட்சித் தலைவர் பதவிக்கும் பட்டுவாடா நடந்திருப்பது உட்சபட்சமானது என்று புருவங்களை உயரவைக்கிறது.
9ஆம் தேதியன்று நடக்கு இரண்டாம் கட்டத்தேர்தல் பகுதியின் பிரச்சாரத்திற்காக வந்த அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஒ.பி.எஸ்., தென்காசி மற்றும் பொன்னாக்குடிப் பகுதிகளில் மாவட்டத்தில் போட்டியிடுகிற அதிமுகவின் அனைத்து வேட்பாளர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்தவர், ஜெயலலிதா ஆட்சியின்போது கல்வியில் முன்னேற்றம், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள், மிக்சி கிரைண்டர் வழங்கியது, அவரது ஆட்சியின்போது நடந்த திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லிப் பிரச்சாரம் செய்யுங்கள், என்று சொன்னவர் எடப்பாடி பழனிசாமியையும், அவரது ஆட்சியில் கொண்டுவரப்பட்ட, நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும் சொல்லாமல் எடப்பாடி பழனிசாமி பற்றி பேசுவதைக் கவனமாகத் தவிர்த்திருக்கிறார் ஒ.பி.எஸ்.
வேட்பாளர்களுக்கான தேர்தல் பணம் பற்றிப் பேசுவார், உதவுவார் என்று ஏக எதிர்பார்ப்புகளுடன் இருந்த வேட்பாளர்களுக்கு, ஒ.பி.எஸ். பணம் பற்றிய பேச்சை மருந்தக்குக் கூடப் பேசாமலிருந்ததும் அதே சமயம், கட்சியும் இரண்டு மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்களான மாஜி அமைச்சர்கள் கவனிப்பார்கள் என்று எடப்பாடி பழனிசாமியால் சொல்லப்பட்டாலும் அருகிலிருந்த மாஜிக்களோ இதுபற்றி வாய் திறக்கவேயில்லையாம். இறுதிவரை மாஜிக்கள் தங்களின் கல்லாப் பெட்டிகளைத் திறக்காமல் வைட்டமின் விஷயத்தில் நழுவிக்கொண்டார்களாம்.
வைட்டமின் பற்றியவைகளைக் கவனமாகத் தவிர்த்த ஒ.பி.எஸ். தன்னுடைய கட்சி மற்றும் தேர்தல் பிரச்சாரக் கடமைகளை முடித்துக்கொண்டு கிளம்பியதால் கடுப்பிலிருந்த வேட்பாளர்கள் புலம்பத் தொடங்கியிருக்கிறார்கள்.
எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுடனிருந்த அதிமுகவின் நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களுடன் பேசியபோது,
“ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ். பிரச்சார முறைகளைப் பேசியதில் எடப்பாடி பழனிசாமியைக் கவனமாகத் தவிர்த்திருக்கிறார். அது அவர்களின் உரசலை வெளிப்படுத்துகிறது. கட்சித் தலைமையில் முடிவு எடுக்கிற இடத்திலிருக்கும் ஒ.பி.எஸ். ஒப்புக்குக் கூட தேர்தல் செலவு பற்றி பேசாமல் வெறுங்கையால் முழம் போட்டுவிட்டுப் போயிருக்கிறார் ஆட்சியின்போது வளமாக இருந்த மாஜி அமைச்சர்கள் கூட இந்த விஷயத்தில் கழுவிய மீனாக நழுவிக்கொண்டார்கள். அம்மா காலம் என்றால் இப்படி இருக்குமா. கடன்பட்டும் கையிருப்பைக் காலி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்” என்கிறார்கள் வேதனையோடு.
ஒட்டுமொத்த அதிமுகவினரையும் அதிருப்தியில் தள்ளியிருக்கிறது இந்த உள்ளாட்சித் தேர்தல்.