கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிககள் உள்ளன. 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் ஓட்டு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் இடையே தான் போட்டி நிலவுகிறது. கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்றுவது யார்? என்பது இன்று பகல் 12 மணிக்கு தெரிந்துவிடும்.
இந்த தேர்தல் முடிவு தான் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கருதுகிறார்கள்.
இந்த தேர்தலில் பா.ஜனதா வென்றால், அது பிரதமர் மோடியின் கரங்களை மேலும் பலப்படுத்துவதாக இருக்கும் என்று பாஜகவினர் தெரிவிக்கின்றனர். ஒருவேளை காங்கிரஸ் வெற்றிபெற்றால், கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் மற்றும் இதர எதிர்க்கட்சிகளின் தொண்டர்களுக்கு உற்சாகம் அளிப்பதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை என காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கின்றனர். ஆகையால் தேர்தல் முடிவுகளை அறிய கர்நாடகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாடே மிகுந்த ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறது.