தி.மு.க.வில் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் வந்த பிறகு நிலைமை எப்படி இருக்கிறது என்று விசாரித்த போது, சட்டமன்றத் தேர்தலில், உதயநிதிக்காக வேளச்சேரி அல்லது ஆயிரம்விளக்கு தொகுதியைத் தயார் செய்து வைக்கும்படி சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் சொல்லப்பட்டதாக சொல்லப்டுகிறது. மாவட்ட நிர்வாகிகளில் இருந்து மாநிலத் தலைமை வரை உதயநிதி விசயத்தில் அங்கே தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கூறுகின்றனர். உதயநிதிக்குத் தரப்படும் அதிக முக்கியத்துவம், கட்சியிலேயே ஒரு பகுதியினருக்கு உற்சாகத்தையும் இன்னொரு பகுதியினருக்கு அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர். இந்த நிலையில் தி.மு.க. இளைஞரணியுடன் இளம்பெண்களுக்கான அமைப்பையும் கொண்டு வருவதற்கான முயற்சிகளும் நடந்து வருவதாக தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் தி.மு.க.வில் மகளிரணி என்ற தனி அமைப்பு இருக்கிறது.
மகளிரணிச் செயலாளராக இருக்கும் கனிமொழி எம்.பி.யும் அந்த அணியின் நிர்வாகிகளும், இளைஞரணியில் இளம்பெண்களைச் சேர்க்க நடக்கும் முயற்சியைப் பார்த்து அதிருப்தி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இளம்பெண்களை இளைஞரணியில் சேர்க்க வேண்டும் என்று சொன்னால், மகளிரணி என்ன முதியோர் அமைப்பா? என்கிற எரிச்சல் வெளிப்படுவதாக சொல்கின்றனர். தனது தூத்துக்குடி தொகுதியில் மழை என்றதும், அங்கே சென்று மக்களோடு மக்களாக நின்றார் கனிமொழி. ஆனால் இடைத்தேர்தலில் அந்தளவு ஆர்வம் காட்டவில்லை. அப்போது செர்பியாவில் நடந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் கலந்து கொண்டார். இளைஞரணியா? மகளிரணியா? என்கிற ஃபைட் தி.மு.க.வில் நீடித்து வருவதாக சொல்லப்படுகிறது.