ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தோல்விக்குப் பின்பு, எடப்பாடியே கெட் அவுட் என்றும் எட்டுத் தோல்வி எடப்பாடி என்றும் அ.தி.மு.க தொண்டர்களே வெளிப்படையாக போஸ்டர்களை ஒட்டி அமர்க்களப்படுத்தியது ஒருபக்கம் இருந்தாலும் இப்போது எடப்பாடிக்கு எதிராக பாஜகவும் கிளம்பியிருப்பது பரபரப்பு சூட்டைக் கிளப்பியுள்ளது.
இந்தச் சூழலில் தமிழக பா.ஜ.க.வின் ஐ.டி.விங் தலைமை நிர்வாகியான நிர்மல்குமார் மற்றும் ஐ.டி.விங்கின் மாநில செயலாளரான திலிப் கண்ணன் இருவரும் விலகி அடுத்தடுத்து இ.பி.எஸ்ஸை சந்தித்து அ.தி.மு.கவில் ஐக்கியமானது பா.ஜ.க.வை மட்டுமல்ல குறிப்பாக மாநில தலைவர் அண்ணாமலையின் அடிவயிற்றை கலங்க வைத்திருக்கிறதாம். அதன் வெளிப்பாடே கலக்கத்தைக் காட்டிக் கொள்ளாமல் எங்கிருந்தாலும் வாழ்க என வாழ்த்தி இருக்கிறார் அண்ணாமலை.
இந்த நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க.வின் இளைஞரணி தலைவரான தினேஷ் ரோடி மற்றும் நான்கு நிர்வாகிகள் என ஐந்து பேர்களும் தினேஷ் ரோடியுடன் இணைந்து கடந்த ஏழாம் தேதி மாலை கோவில்பட்டி நகரின் ஒதுக்குப் புறமான இனாம் மணியாச்சி சாலை பிரிவில் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடியின் உருவப் படங்களை எரித்தவர்கள் அவருக்கு எதிராக கோஷமிட்டனர். எடப்பாடியை கண்டித்து துரோகி எடப்பாடி என்று போஸ்டரும் ஒட்டியிருந்தனர். எங்கள் கூட்டணியில் இருந்து கொண்டே எங்கள் கட்சியின் முக்கிய புள்ளிகளை வளைத்து தன் கட்சியில் சேர்த்திருக்கிறார் எடப்பாடி. இது கூட்டணி தர்மத்திற்கு எதிரானதாகும். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர் வினை உண்டு. அதை வெளிப்படுத்தவும் எங்களின் எதிர்ப்பைக் காட்டவுமே இந்தப் போராட்டம் என்றார் தினேஷ் ரோடி.
இது குறித்து நாம் கோவில்பட்டி அ.தி.மு.கவின் எம்.எல்.ஏ.வும் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜுவிடம் கேட்டதில், "ஆரம்பத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க.கூட்டணி ஏற்பட்டபோதே எங்கள் கட்சியின் சோழவந்தான் எம்.எல்.ஏ.வும், நயினார் நாகேந்திரனும் பா.ஜ.கவிற்குப் போன போதே இணைத்துக் கொண்டவர்கள். அ.தி.மு.க. தன் கூட்டணி கட்சி என யோசித்தார்களா. இல்லையே. அதனை நாங்கள் பெரிதுபடுத்தவில்லையே. கௌரவமாக எடுத்துக் கொண்டோம். அதைப் போன்றே பா.ஜ.க. நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்ததை பா.ஜ.க.பெருந்தன்மையாக கௌரவமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கட்சியின் ஒட்டு மொத்த ரகசியங்களும், நிர்வாகச் செயல்பாடுகளையும் கொண்டு மூளையாகச் செயல்படுவது ஐ.டி.விங் அதன் இரண்டு தலைமை நிர்வாகிகள் அங்கிருந்து விலகி அவர்களின் விருப்பப்படி இணைந்துள்ளனர். கௌரவமாக எடுத்துக் கொள்ளுங்கள். தன்னுடைய மொத்த ரகசியங்களும் லீக் ஆகிவிட்டதே... எங்களுக்கு வந்து விட்டதே என்று அண்ணாமலை பதறுகிறார். அது டெல்லி வரை எதிரொலித்திருக்கிறது" என்றார் அழுத்தமாக.