Skip to main content

வேலூர் தேர்தல் உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 27/07/2019 | Edited on 27/07/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை தொடர்ந்து திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்தது. இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக திமுக பொருளாளர் துரைமுகனின் மகன் கதிர் ஆனந்த் களமிறங்குகிறார். அதிமுக சார்பாக புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.நாம் தமிழர் கட்சி சார்பாக தீப லட்சுமியும் போட்டியிடுகிறார்.   

 

dmk



இந்த நிலையில் வேலூர் இடைத்தேர்தலில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியும், கமலின் மக்கள் நீதி மய்ய கட்சியும் போட்டியிடவில்லை என்று அறிவித்தனர். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 37 தொகுதிகளில் மாபெரும் வெற்றியை பெற்றது திமுக. இதனால் இந்த தொகுதியிலும் வெற்றிபெற வேண்டும் என்று தேர்தல் பொறுப்பாளர்களுக்கு திமுக தலைமை உத்தரவு போட்டதாக சொல்லப்படுகிறது. வேலூர் தேர்தலில் வெற்றி பெற்றால் தான் மக்கள் திமுகவை முழுமையாக நம்புவார்கள். அதனால் வேலூர் தொகுதியில் வெற்றிபெறுவதற்கு தீவிரமாக களப்பணியில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இருக்க வேண்டும் என்று திமுக தலைமை கூறியுள்ளதாக சொல்கின்றனர். அதே போல் அதிமுகவும் நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்று மீதமுள்ள அனைத்து தொகுதியிலும் தோல்வியை சந்தித்தோம். இது கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. 


அதனால் இழந்த வாக்கு வங்கியையும், மக்கள் செல்வாக்கை திரும்ப பெற வேண்டும் என்றால் வேலூர் தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களத்தில் உள்ளதாக கூறுகின்றனர். அதனால் 200க்கும் மேற்பட்ட தேர்தல் பொறுப்பாளர்களை வேலூர் தொகுதியில் அதிமுக சார்பாக நியமித்துள்ளனர். திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் தீவிரமாக களத்தில் இருப்பதால் வெற்றி வாய்ப்பு இரண்டு கட்சிகளுக்கும் இடையே கடு போட்டி நிலவி இருப்பதாக உளவுத்துறை ரிப்போர்ட் கூறியுள்ளது. மேலும் வேலூர் தொகுதியில் முஸ்லீம் வாக்குகள் அதிகம் இருப்பதால் அந்த வாக்குகள் முழுவதும் திமுகவிற்கு வர வாய்ப்பு உள்ளதால் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு கொஞ்சம் அதிகமாக காணப்படுகிறது என்றும் உளவுத்துறை கூறியதாக தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை வேலூரில் இன்று காலையில் இருந்தே ஆரம்பித்தது திமுக நிர்வாகிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

சார்ந்த செய்திகள்