தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், திமுக கூட்டணியில், திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் (04 மார்ச்) விசிகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கையெழுத்தான நிலையில், காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகளுடன் தொடர்ந்து தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.
திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொகுதிப் பங்கீட்டிலும் இழுபறி நீடிப்பதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் இன்று (06.03.2021) மாநில செயற்குழு கூட்டம் இரண்டாம் முறையாக நடைபெற இருக்கிறது. இந்நிலையில் திமுக உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு வந்தபோது செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “திமுக ஒதுக்கும் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. தொடர்ந்து பேசினோம், இன்று மாலை திமுக தலைவரிடம் பேசி சொல்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஒரு நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம். வந்தால் நல்லது'' என்றார்.
அதிமுக - பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு, ''அதெல்லாம் காயலாங்கடை இன்ஜின். கழண்டுபோன இன்ஜின். அதெல்லாம் ஓடாது. அக்குவேரா ஆணிவேரா கழண்டுக் கிடக்கும் கூட்டணி அது'' என்றார்.
இறுதியாக 9 தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டிருப்பதாகவும், ஆனால் 6 தொகுதிகளை திமுக ஒதுக்க முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.