Published on 21/08/2019 | Edited on 21/08/2019
அதிமுகவுடன் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை இணைந்து செயல்படும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா நேற்றைய முன்தினம் அறிவித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனக்கு பின் அதிமுக நிலைக்க வேண்டும் என விரும்பினார். அதன்படி எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை அதிமுகவுடன் இணைந்து செயல்படும் என ஜெ.தீபா தெரிவித்தார். அதோடு அதிமுக கட்சியில் எனக்கு எந்த பதவியும் வேண்டாம், பொறுப்பும் வேண்டாம் என்று தெரிவித்தார். நான் என்றும் ஜெயலலிதா விசுவாசியாக இருப்பேன் என்றும் கூறினார்.
அதே போல் அதிமுகவில் இணையும் எனது தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டியலை அதிமுக தலைமைக்கு தர இருக்கிறேன் என்றும் கூறினார். இந்நிலையில், அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி தரும் விதமாக ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை சட்டப்படி மீட்பேன் என்று தெரிவித்தார். ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் எங்களின் குடும்ப சொத்து. அது அதிமுக சொத்து கிடையாது. அரசின் சொத்து கிடையாது. அது எங்களுக்கு சொந்தமானது. போயஸ் இல்லத்திற்கும் அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. போயஸ் இல்லத்தை மீட்டு எடுப்பேன் என கூறியுள்ளார். இதனால் ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக அறிவிக்க நினைக்கும் அதிமுக தலைமைக்கும், தொண்டர்களுக்கும் சற்று அதிர்ச்சி ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.