Skip to main content

“அதிமுகவில் இருந்து வெளியே போனவர்கள் எல்லாம் அழிந்து போனவர்களாகதான் இருக்கிறார்கள்” ஜெயக்குமார் பேட்டி

Published on 16/05/2019 | Edited on 16/05/2019


திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட விளாச்சேரி பகுதியில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளரை சந்தித்தார். அப்போது, மீண்டும் இந்து தீவிரவாதி என கமல் கூறியது குறித்து கேள்வி ஏழுப்பப்பட்டது. அதற்கு ஜெயக்குமார், “கமல் கூறிய கருத்து ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம். எம்ஜிஆர் அவர்களின் படங்களிலும் கண்ணியம் கட்டுபாடு என அனைத்தும் இருந்தது. அதே போல் அரசியலும் இருந்தது. கமலைப் பொறுத்தவரை திரைப்படத்திலும் கண்ணியம் இல்லை அரசியலிலும் இல்லை. இந்த மாதிரி வார்த்தைகளை கூறும்போது வாங்கி கட்டி கொண்டு தான் இருக்க வேண்டும். தான் செய்தது தவறுதான் என்று கூறும்போதுதான் அனைவரும் சிறந்த மனப்பான்மையோடு ஏற்றுக் கொள்வார்கள். அதிமுக என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்று. திமுக கூட்டணி என்பது காகித ஓடம். வருகிற 23ம் தேதி காங்கிரஸ், திமுக, அமமுக, ஆகியவை அந்த நிலைமைக்குதான் வரும்”என்றார். 

 

jayakumar


அரசியலுக்கு ரஜினிகாந்த் வந்தால் அதிமுக கூட்டணி வைக்கும் என ராஜேந்திரபாலஜி கூறியது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, “ரஜினிகாந்த் ஒன்றும் வேண்டாத மனிதர் அல்ல. எல்லோருக்கும் வேண்டியவர்தான். அதிமுகவிற்கு அவர் வந்தால் நல்லது” என்றார். மேலும் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ஸ்டாலின் ஒரு கணக்கு வாத்தியாராக மாறியிருக்கிறார். அவர் கூட்டல் பெருக்களில் சிறந்தவராக இருக்கிறார். ஆனால், ஸ்டாலினுக்கு கழித்தல் தெரியாது 23ஆம் தேதிக்கு பின்பு அவர் கழித்தலில்தான் செல்வார். தமிழிசை தெரிவித்ததிற்கு ஸ்டாலின் நிரூபிக்க தயார் என்று தான் தெரிவிக்கிறாரே தவிர, நான் பேசவில்லை என்று அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. திமுகவிற்கு கொள்கை இலட்சியம் தொலைநோக்குப் பார்வை என எதுவும் கிடையாது. ஒன்று மட்டும்தான் உள்ளது அது அதிகாரப் பசி” என்றார்.
 

மேலும் அமமுக கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் தினகரன் குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக அரசை கவிழ்க்க வேண்டும் என்று நினைப்பது மிகப்பெரிய துரோகம். இதை திமுக வேண்டுமானாலும் நினைக்கலாம். ஆனால், தினகரன் நினைப்பது பச்சை துரோகம். அதிமுகவில் இருந்து வெளியே போனவர்கள் எல்லாம் அழிந்து போனவர்களாகதான் இருக்கிறார்கள்.


தேர்தலுக்கு பின்பு அமமுக இருக்காது. அதிமுகவின் உண்மை தொண்டராக இருந்தால் அமமுகவில் இருந்து அதிமுகவிற்கு மீண்டும் திரும்புவார்கள். அமமுக ஒரு லெட்டர் பேடு கட்சி. வாக்கு சேகரிப்பதற்காக திருப்பரங்குன்றம் ஒட்டப்பிடாரம் அரவக்குறிச்சி சூலூர் என அனைத்து தொகுதிகளுக்கும் தினமும் செல்லும் தினகரன், இதுனாள் வரைக்கும் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற பின்பு நேரடியாக சென்று மக்களுக்கு நன்றி சொல்லி இருக்கிறாரா. சட்டமன்ற அலுவலகத்திற்கு கூட தினகரன் செல்லவில்லையே. கலைஞர் அவர்களால் 2003 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியை கவிழ்க்க முடிந்ததா? கலைஞர் கைது செய்யப்பட்ட போது அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று எவ்வளவோ முயற்சிகள் எடுத்தார். கலைஞரால் அது முடிந்ததா? கலைஞரால் அவர்களால் முடியாத ஒன்று ஸ்டாலினால் எப்படி முடியும்? ஜாதி, மத ரீதியாக கமல்ஹாசன் தமிழகத்திற்கு குந்தகம் விளைவித்து அதன் மூலம் ஆதாயம் தேட நினைத்தால் சட்டத்திற்கு முன் கமல்ஹாசன் நிற்க வேண்டிய நிலை வரும்.


7 தமிழர் விடுதலை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், “சட்டமன்றத்தின் மூலம் ஒரு தீர்மானம் ஏற்படுத்தி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 7 தமிழர் விடுதலை குறித்து மாநிலம் முடிவு செய்ய வேண்டிய  நிலைக்கு வந்தபோது  ஞாயிற்றுக்கிழமை கூட அமைச்சரவை கூட்டம் உடனடியாக கூட்டப்பட்டு அமைச்சரவை முடிவு எடுத்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து நாங்கள் அழுத்தம் கொடுத்து வருகிறோம் இந்த விஷயத்தை பொருத்தமட்டில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்