ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என்று ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதில் இருந்து, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த அறிவிப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், தனது கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தான் அறிவித்த டிசம்பர் 31ஆம் தேதி நெருங்குவதால் மன்ற நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை மற்றும் கட்சித் துவங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார் ரஜினி. கட்சி சின்னம், பெயர் ஆகியவற்றைத் தேர்வு செய்து, அதனைப் பதிவு செய்வதற்கான பணிகள் நடந்து வருவதாகக் கூறுகின்றனர்.
இந்த நிலையில், டிசம்பர் 31ஆம் தேதி ரஜினிகாந்த் தனது கட்சியைத் துவங்குவதற்கான தேதியை அறிவிக்கும் நாளில், பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா தமிழகத்தில் இருப்பார் என்றும் புதுவருடத் தொடக்க நாளை தமிழகத்தில் கொண்டாடுவார் என்றும் கூறப்பட்ட நிலையில், அதனை உறுதிப்படுத்தியுள்ளது தமிழக பாஜக.
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, வரும் 30, 31, 1ஆம் தேதிகளில் பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா தமிழகம் மற்றும் புதுச்சேரி வரவுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
ஜெ.பி.நட்டா மட்டுமல்ல வேறு சில பா.ஜ.க தலைவர்களும் தமிழகம் வருவார்கள் என்றும், அப்போது ரஜினி கட்சி தொடங்குவதற்கு வாழ்த்துத் தெரிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே தற்பொழுது வரை பா.ஜ.கவுடன் நேரடி கூட்டணி எதுவும் இல்லை எனத் தனக்கு ரஜினிகாந்த் வாக்குறுதி தந்துள்ளார் எனத் தமிழருவி மணியன் சொல்லி வருகிறார்.
இருப்பினும் ஜெ.பி.நட்டா வருகையும், அதற்கு அடுத்த நாள் கட்சியை அறிவிக்கும் நாளை ரஜினி வெளியிடுவதும் அரசியல் விமர்சகர்களிடையே விவாதத்தை எழுப்பியுள்ளது.