திருச்செந்தூர் சுப்ரமணியன் சுவாமி கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவரிடம் ‘சமயபுரம் கோவிலில் மொட்டை அடிப்பவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 4 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “திமுக ஆட்சியில் தவறுகள், முறைகேடுகள் யார் செய்தாலும் அவர்களின் மேல் நடவடிக்கை எடுப்பார்கள்; பணி நீக்கம் செய்வார்கள். இந்த ஆட்சியில் தவறுகள் நடந்தால் அதற்கு உரிய பரிகாரத்தை நிச்சயமாக துறை காணும்” எனக் கூறினார்.
தொடர்ந்து மதுரை சித்திரை திருவிழா முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். ஏப்ரல் 30 ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், மே 1 ஆம் தேதி திக் விஜயமும், மே 2ல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், மே 3 ஆம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. மே 4 ஆம் தேதி கள்ளழகர் எதிர் சேவை, மே 5ல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது. இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் மூர்த்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.