சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் அவரை ஓ.பன்னீர்செல்வமும், பண்ருட்டி ராமச்சந்திரனும் சந்தித்துள்ளனர். தொடர்ச்சியாக மாநாடுகளை நடத்த ஓபிஎஸ் திட்டமிட்டிருப்பதாகவும் மாநாட்டில் பங்கேற்க டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுக்க இந்த சந்திப்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
டிடிவி மற்றும் சசிகலா உடன் இணைந்து பணியாற்ற தயார் என ஓபிஎஸ் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் இந்த சந்திப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மேலும் தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு பெரிதாக வாக்கு வங்கி இல்லாததால் அங்குள்ள அதிமுக வாக்குகளைத் தன் பக்கம் இழுக்க முயற்சிகள் மேற்கொள்வது குறித்தும் விவாதிக்க இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சந்திப்பு முடிந்த பின் பண்ருட்டி ராமச்சந்திரன், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், “இன்று டிடிவி தினகரனை சந்தித்துள்ளோம். சசிகலாவை சந்திக்க தகவல் சொன்னோம். வெளியூர் சென்றுள்ளேன். வந்ததும் உறுதியாக சந்திப்போம் என சொல்லியுள்ளார்கள். எம்.ஜி.ஆர் எந்த நோக்கத்திற்காக உருவாக்கினாரோ அந்த நோக்கம் நிறைவேறும். அனைத்து அடிப்படை தொண்டர்களும் இணைய வேண்டும். அதை நோக்கித்தான் இன்றைய முதல் கட்ட சந்திப்பு நடந்துள்ளது. ஒவ்வொரு சந்திப்பும் தொண்டர்களை இணைத்து அதிமுகவை புதுப்பொலிவுடன் நிலைநிறுத்துவோம்.
தொண்டர்களின் விருப்பத்தின் பேரில்தான் இது நடந்தது. திருச்சி மாநாட்டில் தொண்டர்கள் எங்களுக்கு வலியுறுத்தியதே, நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இயக்கத்தை வழி நடத்த வேண்டும் என்பதுதான். இபிஎஸ் ஒரு சிலரை தவிர அனைவரையும் சேர்த்துக் கொள்வதாக சொல்கிறார். அது அவரது சுயநலம். எங்கள் நோக்கம் அனைத்து தொண்டர்களையும் இணைக்க வேண்டும். அடுத்த மாநாட்டுக்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தலைமைக் கழக நிர்வாகிகள் இடத்தை பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் கிரிக்கெட் போட்டியை பார்க்க சென்றேன். சபரீசனும் வந்திருந்தார். எதிர்பாராமல் அங்கே சந்தித்தோம். மரியாதை நிமித்தமாக அந்த சந்திப்பு நிகழ்ந்தது. அரசியல் ரீதியிலான சந்திப்பு இல்லை” எனக் கூறினார்.