"நெடுவாசலில் போராட்டம் நடக்கவில்லை. 6 கி.மீ தள்ளி வடகாட்டில் தான் 30 பேர் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு யார் உதவி செய்கிறார்கள் என்பதை விசாரனை செய்ய வேண்டும்" என்று பேசிய எச்.ராஜா வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று போராட்டக்குழுவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 15 ந் தேதி ஹைட்ரோ கார்ப்பன் எடுக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியான பிறகு அங்கு போராட்டம் தொடங்கியது. அதே நேரத்தில் வடகாடு கல்லிக்கொல்லை கிராமத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒ.என்.ஜி.சி. நிறுவனத்தால் 12 ஆயிரம் அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றை அகற்ற வேண்டும் என்று வடகாடு பொதுமக்கள், இளைஞர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் பிறகு சில நாட்களில் ஒ.என்.ஜி.சி. நிறுவன அதிகாரிகள் கல்லிக்கொல்லை ஆழ்குழாய் கிணறுக்கு மின் இணைப்பு கேட்டு சென்றுள்ள தகவல் அறிந்து வடகாடு நடைவீதியில் இளைஞர்கள், பொதுமக்கள் கடந்த ஆண்டு மார்ச் 5 ந் தேதி போராட்டத்தை தொடங்கினார்கள்.
தொடர்ந்து 21 நாட்கள் போராட்டம் நீடித்த நிலையில் மார்ச் 25 ந் தேதி மாவட்ட கலெக்டர் கணேஷ் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று மின் இணைப்பு கொடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காது என்று கூறியதுடன் குறிப்பிட்ட ஆழ்குழாய் கிணற்றை 6 மாதங்களுக்குள் அகற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுதிக் கொடுத்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் தங்போது பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டதாக 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவின் பேச்சுக்கு வடகாடு, கீரமங்கலம் போராட்டக்குழுவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து வடகாடு ராஜகுமாரன், சேந்தன்குடி தங்க.கண்ணன் கூறும் போது..
"எச்.ராஜா அடிக்கடி பிரிவினையை பிரச்சனைகளை கிளப்பும் பேச்சுகளை பேசி வருகிறார். அதாவது தமிழகம் முழுவதும் போராட்டங்களாக உள்ளதே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் சொல்லும் போது.. நெடுவாசல் மக்கள் போராடவில்லை 6 கி.மீ தள்ளி வடகாட்டில் 30 பேர் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களுக்கு உதவிகள் எங்கிருந்து வருகிறது என்று விசாரிக்க வேண்டும் என்று பேசி இருப்பது போராட்டக்காரர்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது. எங்கள் விவசாயத்தை வாழ்வாதாரத்தை காக்க நாங்கள் போராடி வருகிறோம். வழக்கு போடமாட்டோம் என்று சொன்ன மாவட்ட நிர்வாகம் இப்போது வழக்கு போட்டு நீதிமன்றத்திற்கு இழுக்கிறது. இந்த நேரத்தில் எச்.ராஜா எங்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியிருப்பது கண்டனத்திற்குறியது. அவராக முன்வந்து இந்த பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் எச்.ராஜா பேச்சுக்காக ஒரு போராட்டம் நடத்த வேண்டி இருக்கும். நாங்கள் எங்கள் மண்ணை காக்க போராட்டம் நடத்தினோம் பல மாதங்களாக அமைதியாக உள்ளது. யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டிய அவசியம் இல்லை" என்றனர்.