
கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில், வெறுப்புப் பிரச்சாரம் செய்வதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோரை கண்டித்து இருவரையும் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கரூர் மாவட்ட பாஜகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சர்ச் கார்னர் பகுதியில் அமைந்துள்ள கரூர் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்து, நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 70-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் . இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு சிறிது நேரம் பரபரப்பு.
அதே போன்று திருச்சியிலும், பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது எச்.ராஜாவுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டதில் காவல்துறையினரை நேருக்கு நேர் எச்.ராஜா கையை நீட்டி பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், “திராவிடம் என்பது சித்தாந்தம். சனாதனம் என்பது மனிதர்கள். எண்பது கோடி மனிதர்களை கொலை செய்வேன் என்று பேசுவது சரியா? அமைச்சர் உதயநிதியை கைது செய்யும் வரை, சேகர் பாபு அமைச்சர் பதவியில் இருந்து விலகும் வரை எங்களது போராட்டம் தொடரும்” என பேசினார். பின்னர் 100-க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.