கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கே ஆட்சியமைக்கும் தகுதி இருப்பதாக அருண் ஜேட்லி முன்னர் கூறியிருந்தது இப்போது வைரலாகி வருகிறது.
கர்நாடக சட்டசபை தேர்தல் நடந்துமுடிந்துள்ள நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தொடக்கத்தில் பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலையில் இருந்த பா.ஜ.க. 104 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. அதேசமயம், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், ம.ஜ.த. 37 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன. ஆட்சியமைக்கப் போதுமான 113 தொகுதிகளை யாரும் பெற்றிருக்காத நிலையில், காங்கிரஸ் தனது ஆதரவினை ம.ஜ.த.விற்கு அளிப்பதாக அறிவித்தது.
ஆனால், பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, நாங்களே பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்கிறோம். எங்களுக்கே ஆட்சியமைக்கும் தகுதி இருக்கிறது என தெரிவித்தார். அதையே பா.ஜ.க.வைச் சேர்ந்த பலரும் கூறினர்.
இந்நிலையில், ‘தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தொங்கு சட்டமன்றம் ஏற்படும் நிலை வந்தால், எம்.எல்.ஏ.க்கள் ஒன்றிணைந்து அமைக்கும் கூட்டணியின் தலைவரை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கவேண்டும். அவர்களை பெரும்பான்மையை நிரூபிக்கச் செய்யவேண்டும். இதற்கு அரசியலமைப்புச் சட்டத்திலும் இடம் இருக்கிறது’ என அருண் ஜேட்லி சென்ற ஆண்டு ட்விட்டரில் வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது.