கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாகவே முன்பு நடந்ததை போல் சென்னை கலைவாணர் அரங்கில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் துவங்கியது. புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை துவங்கினார். அப்பொழுது ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக மற்றும் மற்றும் விசிக எம்.எல்.ஏக்கள் ஆளூர் ஷநவாஸ், சிந்தனை செல்வன், செய்யூர் பாபு, திருப்போரூர் பாலாஜி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் உடன் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், ''திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த 8 மாதமாக தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. இந்த எட்டுமாத காலத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, செயின் பறிப்பு, சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுதல் ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கான செய்திகள் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. பொதுமக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழகத்தில் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனை அதிகமாக உள்ளது. இன்றைய தினம்கூட ஆந்திராவில் இருந்து 98 கிலோ கஞ்சா தமிழகத்திற்கு கடத்திவரப்பட்டு பிடிபட்டதாக செய்திகள் வந்துள்ளன. தமிழகத்தில் போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்துவிட்டது. இதனைக் கட்டுப்படுத்தாத திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம், கட்டப்பஞ்சாயத்து மீண்டும் தலைதூக்கியுள்ளது'' என்றார்.