Skip to main content

“நம்மள யாரும் ஒன்னும் கேட்க முடியாதுன்னு நடந்துக்கிறது சரியில்ல” - டிடிவி தினகரன்

Published on 10/01/2023 | Edited on 10/01/2023

 

The governor should act to help the government as well

 

இந்த ஆண்டிற்கான முதல் சட்டசபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தினார். அதில் ஆளுநர் அரசு தயாரித்துக் கொடுத்த உரையை முழுவதுமாகப் படிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின், “ஆளுநர் அரசு கொடுத்த உரையை முழுவதுமாகப் படிக்கவில்லை” எனக் குற்றம் சாட்டி ஆளுநரின் உரை அவைக்குறிப்பில் இடம்பெறாது என்று தீர்மானம் கொண்டு வந்தார். அதன்பின் ஆளுநர் வெளிநடப்பு செய்தார்.

 

இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் கவர்னரின் செயல்பாடுகள் குறித்தும் நேற்றைய சட்டமன்ற நிகழ்வுகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்த அவர், “தமிழக சட்டமன்ற வரலாற்றில் நேற்றைய தினம் ஒரு கருப்பு நாள். காரணம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக இந்தியாவில் வாழும் எந்த குடிமகன் செயல்பட்டாலும் அது தவறுதான். என்ன செய்தாலும் நீதிமன்றமும் சட்டமன்றமும் ஒன்றும் கேட்க முடியாது என்பது போன்ற ஒரு நடவடிக்கை ஆளுநரிடம் இருப்பது உண்மையிலேயே வருத்தம் அளிக்கிற ஒரு விஷயம்.

 

ஆளுநர் தேவை இல்லாத பேச்சை எல்லாம் பேசுகிறார். தமிழ்நாட்டில் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் இருக்கப் போகிறார். தமிழ்நாடு சரியல்ல, தமிழகம் என்று சொல்வது தான் சரி என்று கூறுவது தவறு. மத்திய அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுவது போல் அவரது செயல்பாடு இருக்கிறது. மத்திய அரசு அவரை திரும்பப்பெற்றால்தான் மத்திய அரசுக்கே நல்ல பெயர் கிடைக்கும். 

 

தமிழகத்தில் இருப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசாங்கம். அரசின் செயல்பாடுகளுக்கு உதவியாக தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக ஆளுநரின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். அரசாங்கத்தின் தவறான செயல்பாடுகளில் கடிவாளம் போடுவது போல் கவர்னர் செயல்படுவது தவறல்ல. ஆனால், இவர் முட்டுக்கட்டையாகச் செயல்படுவது ஜனநாயகத்திற்கும் பாதிப்பினை ஏற்படுத்தும்; தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் அது பாதிப்பினை ஏற்படுத்தும். தமிழ்நாட்டு மக்களுக்கு இது நல்லதல்ல” எனக் கூறினார்.


 

சார்ந்த செய்திகள்