திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க வேண்டும் என்று வியாபாரிகள் போராட்டத்தில் குதித்தபோது, முதல் ஆளாகச் சென்று வியாபாரிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு, வியாபாரிகள் நலன்காக்க தி.மு.க என்றும் துணைநிற்கும் என்று உறுதி அளித்திருந்தார் அன்பில் மகேஷ். இந்நிலையில், கடந்த நவம்பர் 26 ஆம் தேதி, காந்தி மார்க்கெட்டை திறக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
எனவே, தங்களுடைய தாய்வீடான காந்தி மார்கெட்டை திறக்கக் காரணமாக இருந்து, குரல் கொடுத்த சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷுக்கு, தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மாநிலப் பொதுச் செயலாளர் கோவிந்தராஜலு மாலை அணிவித்து நன்றி தெரிவித்ததோடு, சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வியாபாரிகள் தரப்பில் 10 -க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கொடுத்தார்.
மேலும், டிசம்பர் 1 ஆம் தேதி விசாரணைக்கு வந்த வழக்கில், 'கள்ளிக்குடி வணிக வளாகம்' தவறான வழிகாட்டுதலால் உருவாக்கப்பட்டது. ஆகையால், வணிக வளாகச் செயலாளரை ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர்.