![Film director Thangar Bachan announced as CM candidate for Cuddalore Parliamentary Constituency](http://image.nakkheeran.in/cdn/farfuture/ALRI8LsUfnTJWY8MaoiGmEOg0O1S6XeBUUtSIUsSnFs/1711087672/sites/default/files/inline-images/23_91.jpg)
பாராளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக வேட்பாளராக கடலூர் பாராளுமன்றத் தொகுதியில் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர், எழுத்தாளர், நடிகர் எனப் பல்வேறு முகங்களைப் பெற்றுள்ள தங்கர் பச்சான் போட்டியிடுகிறார் எனப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பத்திரக்கோட்டை என்னும் கிராமத்தில் பச்சான்-லட்சுமி தம்பதியினருக்கு 1961 ஆம் ஆண்டு 9வது பிள்ளையாகப் பிறந்துள்ளார். இவரது தந்தை மரபு வழி தெருக்கூத்து கலைஞர் ஆவார். இவரது இயற்பெயர் தங்கராசு பின்னர் இவரது பெயருடன் தந்தையின் பெயரை சேர்த்துக்கொண்டு தங்கர் பச்சான் என மாற்றிக்கொண்டார். இவர் திரைப்படக் கல்லூரியில் ஒளி ஓவியம் கற்று, ஒளி ஓவியர்களிடம் பயிற்சி பெற்று திரைப்பட கலையை அறிந்தவர். இவர் நாவல்கள், சிறுகதை தொகுப்புகள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.
இவரது நூல்களை ஆராய்ச்சி செய்து 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் இளம் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இவரது நூல்கள் பல்வேறு பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாட நூலாக உள்ளது. இவர் தமிழ்த் திரையுலகில் அழகி, சொல்ல மறந்த கதை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைப்பேசி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி நடித்துள்ளார்.
இவர் இயக்கி நடித்துள்ள பள்ளிக்கூடம் படத்திற்கு சிறந்த இயக்குநருக்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கர் பச்சானுக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், விஜித் பச்சான், அரவிந்த் பச்சான் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக பாமக தங்கர் பச்சானை வேட்பாளராக அறிவித்துள்ளது.