ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிமுக சார்பில் தென்னரசு உள்பட 73 பேர் போட்டியிட்டனர். இதில் இளங்கோவன் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 192 ஓட்டுகளும் அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 923 ஓட்டுகளும் வாங்கியதன் மூலம் 66 ஆயிரத்து 21 ஓட்டுகள் கூடுதலாகப் பெற்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். இதில் நாம் தமிழர், தேமுதிக உள்பட 71 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
இந்த அளவுக்கு திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு இமாலய வெற்றியை வாங்கிக் கொடுத்ததே முதல்வர் ஸ்டாலின் தான். அந்த அளவுக்கு தனது அமைச்சரவையில் உள்ள கே.என்.நேரு, சக்கரபாணி, செந்தில் பாலாஜி, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், சாமிநாதன் ஆகிய எட்டு அமைச்சர்கள் தலைமையில் குழு பிரித்து முதல்வர் ஸ்டாலின் தேர்தல் களத்தில் இறக்கினார். இவர்களோடு மற்ற அமைச்சர்கள் மற்றும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள மாவட்டச் செயலாளர்கள் உட்பட பொறுப்பில் இருக்கும் கட்சியினரும் தேர்தல் களத்தில் பணியாற்றினார்கள். அதன் அடிப்படையில் அமைச்சர்கள் தலைமையிலான கட்சியினரும் வார்டு வாரியாக களமிறங்கி வாக்காளர்களைச் சந்தித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வெற்றிபெற வைத்திருக்கிறார்கள். இதில் அமைச்சர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் போட்டிப் போட்டுக் கொண்டு அதிக வாக்குகளையும் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.
இதில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகிய நான்கு அமைச்சர்கள் தலைமையில் மாவட்டச் செயலாளர்களான ஐ.பி.செந்தில்குமார், இளைய அருணா, ராஜேஷ்குமார், மதுரா செந்தில் ஆகியோர் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம் ஆகிய பகுதிகளில் ஒதுக்கப்பட்ட 26, 38 மற்றும் 39 ஆகிய மூன்று வார்டுகளில் உள்ள 23 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கக் கூடிய வாக்காளர்களைச் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் செய்த திட்டங்களையும் சலுகைகளையும் வாக்காளர்களிடம் எடுத்துக் கூறியதுடன் மட்டுமல்லாமல், சாதனை விளக்க நோட்டீஸ்களையும் வீடுதோறும் கொடுத்து கை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்கள்.
இதில் அமைச்சர் சக்கரபாணி ஒரு படி மேலே போய் வாக்காள மக்களை தினசரி வீடுகளில் சந்தித்து, அவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் கொடுத்தது மட்டுமல்லாமல் கூடிய விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் தலைவர் வழங்க இருக்கிறார்கள் என்றும், ஏற்கனவே கொரோனா காலத்தில் 4000 ரூபாய் கொடுத்தோம். அதுபோல் பொங்கலுக்கு பணத்துடன் தொகுப்பு பொருட்களும் வழங்கியிருக்கிறோம். அந்த அளவுக்கு மக்களின் ஆட்சியாகவே முதல்வர் நடத்தி வருகிறார். அதனால் கூட்டணி கட்சி வேட்பாளர் இளங்கோவனை வெற்றி பெறவைப்பதன் மூலம் அனைத்து அடிப்படை வசதிகளையும் தலைவர் மூலம் இத்தொகுதிக்கு கொண்டு வர முடியும் என்றும் கூறி இரவு பகல் பாராமல் வாக்காள மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டியதில் 23 வாக்குச்சாவடிகளில் பதிவான 16143 ஓட்டுகளில் 11101 ஓட்டுகள் கை சின்னத்திற்கும் 3318 ஓட்டுகள் இரட்டை இலைக்கும் கிடைத்தது போக மற்ற வேட்பாளர்களுக்கு 1724 ஓட்டுகள் கிடைத்தன.
இதில் அதிமுக வேட்பாளரை விட 7793 ஓட்டுகள் கூடுதலாக அமைச்சர்கள் பெற்றுக் கொடுத்து இருக்கிறார்கள். அதுபோல் 68.86 சதவீதம் வாக்குகள் வாங்கியதின் மூலம் மற்ற அமைச்சர்கள் குழுவை விட இந்த அமைச்சர்கள் குழு அதிக ஓட்டுகள் வாங்கிக் கொடுத்து முதலிடம் பிடித்த பெருமையை தக்கவைத்து முதல்வரிடமும் பாராட்டைப் பெற்று இருக்கிறது. அதேபோல் அமைச்சர்களான கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருக்கு சூரியம்பாளையம், வீரப்பன்சத்திரம் பகுதியிலுள்ள 33 வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டதில் 68.65 சதவீதம் வாக்குகள் பெற்றுக் கொடுத்து இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறார்கள். இப்படி மற்ற அமைச்சர்கள் குழுவும் இதற்கு அடுத்தபடியான இடங்களை பிடித்து இருக்கிறார்கள்.