ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் களத்தில் ஆளுங்கட்சியான திமுக அதன் தோழமைக் கட்சியான காங்கிரசுக்கு தொகுதியை ஒதுக்கி அதன் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். அவரோடு திமுகவினரும் வாக்கு சேகரிக்கும் பணியைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் என கோஷ்டி யுத்தமும்., அதைத் தொடர்ந்து கூட்டணி குழப்பம்; வேட்பாளர் தேர்வு; கட்சி சின்னம் இப்படி பல சிக்கல்களை எதிர்கொண்டு வேட்பாளர் அறிவிப்பு வராத சூழ்நிலையில் தேர்தல் பணிக்குழு மட்டும் அறிவித்து களத்தில் இருப்பதாக அதிமுக காட்டிக் கொண்டாலும் ஒரு சுறுசுறுப்பு எதுவும் தெரியவில்லை.
இந்த நிலையில் இடைத்தேர்தல் களத்தில் இரண்டாவது கட்சியாக வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணியில் இறங்கியது. ‘தேசிய முற்போக்கு திராவிட கழகம்’ அந்த கட்சியின் ஈரோடு மாவட்டச் செயலாளர் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு மக்களிடம் வாக்கு கேட்கும் பணியைத் தொடங்கிவிட்டார். இந்த நிலையில் மூன்றாவது கட்சியாக தேர்தல் களத்தில் வாக்கு வேட்டையாடி வருகிறது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அக்கட்சியின் வேட்பாளர் சிவ பிரசாத் 28 ஆம் தேதி காலையிலிருந்து குக்கர் சின்னத்திற்கு வாக்கு கேட்டு ஈரோடு கிழக்கு தொகுதியை வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நான்காவது கட்சியாக நாம் தமிழர் கட்சி சார்பில் கண்மணி என்கிற மேனகா போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் 11,629 வாக்குகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.