ஓ.பி.சி. இட ஒதுக்கீடு அமல்படுத்துவதில் உயர்நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு மேல்முறையீடு செய்யாது என்பதை தமிழக பா.ஜ.க. தலைவர் உறுதிப்படுத்த வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி. பிரிவினருக்கான இட ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்றுள்ள தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் முருகன் அவர்கள் மத்திய அரசு இவ்வழக்கில் மேல்முறையீடு செய்யாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 3 மாத காலத்தில் ஓ.பி.சி. பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் முடிவெடுத்து மத்திய அரசு அறிவிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க தமிழக பா.ஜ.க. அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழக பா.ஜ.க. .தலைவர் உயர்நீதிமன்ற தீர்ப்பை மட்டும் வரவேற்றால் போதாது. அதை மத்திய அரசு நடைமுறைப்படுத்த குரல் எழுப்ப வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு இழைக்கப்பட்ட அநீதியை உயர்நீதிமன்ற உத்தரவின் மூலம் தமிழகம் வென்றிருக்கிறது.
ஓ.பி.சி. பிரிவினருக்கு மாநில அரசு வழங்கும் இட ஒதுக்கீட்டின் படி மத்திய அரசும் வழங்கிட முன்வர வேண்டும். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் கடந்த 4 ஆண்டுகாலமாக ஓ.பி.சி. பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை வழங்காமல் மத்திய அரசு துரோகம் செய்திருக்கிறது. இதனால் ஓ.பி.சி. பிரிவினருக்கான உரிமை பறிபோய் இருக்கிறது. நீதிமன்றத்தில் சட்டப்போராட்டத்திற்கு பிறகு ஓ.பி.சி. பிரிவினருக்கான உரிமை நிலைநாட்டப்பட்டிருக்கிறது. மத்திய அரசு நீதிமன்றத்தை காரணம் காட்டி தான் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று கூறியது.
ஆனால் இப்போது நீதிமன்றமே இட ஒதுக்கீடு வழங்க தடையில்லை என்று தீர்ப்பளித்திருக்கிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மவுனத்தைக் கலைத்து உயர்நீதிமன்ற உத்தரவு படி உடனே ஓ.பி.சி. பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்திட வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தமிழக பா.ஜ.க. எடுத்துள்ள நிலைப்பாடு அரசியலுக்காக எடுத்தாக இருந்து விடக்கூடாது.
ஓ.பி.சி. பிரிவினருக்கான உரிமையை மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசிடம் இருந்து தமிழக பா.ஜ.க. பெற்று தந்திட வேண்டும். அதேபோல இவ்வழக்கில் மத்திய அரசு மேல்முறையீடு போகாது என்ற உறுதியையும் தமிழக பா.ஜ.க. தலைவர் அளிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.