அம்பேத்கர் பிறந்த நாளை அரசு சார்பில் சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்ததை அடுத்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் தொல். திருமாவளவன் அவரது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களோடு நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “110 விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர், ஏப்ரல் 14 புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்றும், சமத்துவ உறுதி மொழி ஏற்கப்படும் என்றும், அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட சில நூல்களும் தமிழில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார். அத்துடன் கடந்த 10 வருடங்களாக சரியான பராமரிப்பு இல்லாமல் இருக்கும் அம்பேத்கர் மணிமண்டபத்தை பரமாரிக்க வேண்டும், அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையையும், புத்தரின் சிலையையும் நிறுவ வேண்டும், அங்குள்ள நூலகத்தை சிறப்பாக மறுகட்டமைப்பு செய்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விசிக சார்பில் முதலமைச்சரிடம் மனு கொடுத்தோம். நேற்று முதலமைச்சரை தனிமையில் சந்தித்து விரைவில் அம்பேத்கர் சிலை நிறுவ வேண்டும் என வேண்டுகோள் வைத்திருந்தோம். இன்று சட்டமன்றத்தில் அந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இதற்காக முதலமைச்சரை நேரில் சந்தித்து எங்கள் நன்றியை உரித்தாக்கினோம்.
அவர் துணை முதலமைச்சராக இருந்தபோது 10 ஆண்டுகாலமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி உள்ளிட்ட நான்கு ஊராட்சிகளில் இருந்த எதிர்ப்புகளை எல்லாம் சரி செய்து அனைத்து தரப்பு மக்களின் உடன்பாடோடு தேர்தல் நடத்தினார். அந்த நான்கு ஊராட்சிகளிலும் தலித் சமூகத்தை சார்ந்த தலைவர்களை தலைவர் நாற்காலியில் அமரவைத்த பெருமை இன்றை முதலமைச்சரை சாரும். அதனை வரவேற்கும் வகையில் அன்றைய முதலமைச்சர் கலைஞரை சமத்துவ பெரியார் என்று விசிக சார்பில் பாராட்டினோம். இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமத்துவ நாயகர் என்று போற்றக்கூடிய வகையில் இந்த அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்.” என்றார்.