தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் தமிழக முதல்வர்களுக்கு உப்பு அளித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடத்திய தூத்துக்குடி மக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் 13 கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துப்பாக்கி சூட்டை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் தி.மு.க தோழமை கட்சிகள் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரியிலும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன. நெல்லிதோப்பு சந்திப்பில் ஒன்று திரண்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். சுதேசி மில் அருகே மீனவர் நுகர்வோர் அமைப்பினர் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பினர், தமிழக முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் வேடம் அணிவித்து இருவரை ஊர்வலமாக இழுத்து வந்தனர். "உப்பு கொடுத்த தூத்துக்குடி மக்களை கொன்றது நியாயமா....!? உப்பிட்டவர்களை உள்ளளவும் நினைக்கனுமே.... " என்று உப்பை அள்ளி இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் வாயில் திணித்தனர்.
மேலும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் படங்களை செருப்பாலும், துடைப்பத்தாலும் அடித்தனர். பிரதமர் மோடியின் படத்தையும் தீயிட்டு எரித்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.