









தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மற்றொருபுறம் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளர்களும், வாக்கு சேகரிப்பில் புதிய யுக்திகளைக் கையாளுகின்றனர். குறிப்பாக, டீ கடைகளில் டீ போடுவது, உணவகங்களில் புரோட்டா போடுவது, தோசை சுடுவது, துணி துவைப்பது, பெண்களுக்கு உதவி செய்ய அடுப்பு ஊதுவது, தண்ணீர் அடித்துக் கொடுப்பது, விவசாயிகளுடன் சேர்ந்து நாற்று நடுவது உள்ளிட்ட பல யுக்திகளைக் கையாண்டு மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர். வேட்பாளர்களின் இத்தகைய வாக்கு சேகரிப்பு முறை மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இதில் புதுக்கோட்டை, விராலிமலை, பேராவூரணி, உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. இனி, அடுத்த தேர்தலுக்குத் தான் இது போன்ற புகைப்படங்களைக் காணமுடியும். கடந்த தேர்தல்களைக் காட்டிலும் இந்தத் தேர்தல் வேட்பாளர்களின் வாக்கு சேகரிப்பு முறையால் சற்று வித்தியாசமாகியுள்ளது. இருப்பினும், வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும்போது பொதுமக்களிடம் காட்டும் அக்கறையை வெற்றிபெற்ற பின்னும் காட்டினால் அவர்களின் வாழ்க்கைத்தரமும், தொகுதியின் வளர்ச்சியும் உயரும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.