கரோனா தொற்றை குறைப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் தொற்று தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலம் மாவட்டத்தின் நிலவரம், நடவடிக்கைகள் போன்றவற்றை பற்றி ஆலோசிப்பார். அதனைத் தொடர்ந்து மருத்துவ நிபுணர் குழுவுடனும் ஆலோசனை மேற்கொள்வார். இந்த ஆலோசனையில் சம்மந்தப்பட்ட அமைச்சர்களும், தலைமை செயலக அதிகாரிகளும் இடம் பெறுவார்கள். கடந்த முறை இதேபோன்று மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ குழுவினர்களுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி முடித்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார்.
இதேபோல் இன்றும் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் கே.சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்பார்கள்.
ஆகஸ்ட் 1 முதல் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் பல தளர்வுகள் கொடுக்கப்படும் என்று உறுதிப்படுத்தப்படாத பல தகவல்கள் பரவுகிறது. தற்போது இ-பாஸ் எடுத்து வாகனவசதி உள்ளவர்கள் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். இருசக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் வேலை நிமித்தமாகவும், சொந்த பணிகளுக்காகவும் சென்று வருகின்றனர். வாடகை கார் எடுத்து செல்லும் அளவுக்கு பொருளாதாரம் இல்லாதவர்கள் உறவினர்கள், நண்பர்கள் துக்க மற்றும் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.
வாகன வசதி இல்லாத அன்றாட கூலித் தொழிலுக்கு செல்பவர்கள் எப்போது ரயில், பேருந்துகள் இயக்கப்படும் என்று எதிர்பார்த்திருக்கின்றனர். வாடகை, மளிகை, பள்ளிக் கட்டணம் போன்ற பல்வேறு நெருக்கடியில் உள்ள நடுத்தத்தர மக்கள், ஏழை, எளிய மக்கள் தளர்வுகள் கொடுத்தால் பணிக்கு செல்ல காத்திருக்கின்றனர். இதனால் முதலமைச்சர் என்ன அறிவிக்க போகிறார் என ஆவல் கூடியுள்ளது.
ஏற்கனவே கொடுக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளின்போது, சென்னையில் வேலை வாய்ப்பு இழப்பு போன்ற காரணத்தினால் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். சாப்ட்வேர் நிறுவனத்தில் உள்ளவர்களை தவிர பிற வேலைகளில் இருப்பவர்கள் வீடுகளில் இருந்து வேலை செய்ய முடியாத நிலையில் இருப்பதால் அவர்கள் வேலைக்கு சென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் செங்கல்பட்டு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கரோனா அதிகமாக உள்ளது. தொற்றை குறைப்பதற்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் போராடிக் கொண்டிருக்கின்றன. எனவே இந்த முதலமைச்சர் தலைமையில் இன்றும், நாளையும் நடக்கும் ஆய்வுக் கூட்டம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.