டி.டி.வி. தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் 3வது நீதிபதி எம்.சத்தியநாராயணன் இன்று தீர்ப்பளிக்கவுள்ளார். அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கப்பட உள்ளது.
தற்போது குற்றாலத்தில் உள்ள தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள், தமிழக மக்கள் கொண்டாடும் வகையில் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக அமையும் என்று கூறி வருகின்றனர்.
எப்படி தீர்ப்பு அமைந்தாலும் அதிமுக ஆட்சி தொடரும் என்று ஆளும் கட்சியினர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் சந்தித்துப் பேசினார். தீர்ப்பு சாதகமாக வந்தால் பிரச்சனையில்லை. எதிராக வந்தால் என்ன செய்வது என்று ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
தகுதி நீக்கம் செல்லாது என்று அறிவித்தால், அதை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்யலாம். அப்படி செய்து, இடைக்கால தடை பெற்றால், தற்போதைய நிலையே தொடரும். வழக்கு உயர் நீதிமன்றத்திலிருந்து, உச்ச நீதிமன்றத்திற்கு மாறக் கூடும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் விரைந்து சென்னைக்கு வருமாறு ஆளும் கட்சி தலைவர்கள் உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.