நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல் தமிழகத்தில் நடைபெறுவதற்கு முன்பே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான பிரபு, கலைச்செல்வன், ரத்தினசபாபதி ஆகிய மூண்டு பேருக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நடவடிக்கையை எதிர்த்து சபாநாயகர் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் திமுக முன்னெடுத்து அதற்கான மனுவை சட்டமன்ற செயலாளரிடம் கொடுத்தனர். இதனை ஏற்று சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் சட்ட சபையில் ஜூலை 1 ஆம் தேதி நடக்கும் என்று தனபால் தெரிவித்தார்.
இந்த நிலையில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக கொண்டு வர போவதில்லை என்று ஸ்டாலின் தெரிவித்தார். இது பற்றி விசாரித்த போது, நடந்து முடிந்த நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலில் கொங்கு மண்டல மக்களின் ஆதரவை திமுக பெற்றது. இதனால் அதிமுக கோட்டையான கொங்கு மண்டலத்தில் திமுக இன்னும் வலுப்பெற அங்கு களப்பணிகளை அதிகமாக மேற்கொள்ள வேண்டும் என்று திமுகவினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.
மேலும் கொங்கு மண்டலத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் அதிகமாக நடந்துள்ளதால் அப்பகுதி பெண்களுக்கு எடப்பாடி அரசு மீதான கோபம் மேலும் அதிகரித்துள்ளது. அதிமுக அரசு மீதான எதிர்ப்பால் திமுகவிற்கு வாக்களித்த அப்பகுதி மக்களின் நன்மதிப்பை பெறக்கூடிய அளவில் திமுக செயல்பட்டு கொங்கு மண்டலத்தை திமுக கோட்டையாக மற்ற வேண்டும் என்று ஸ்டாலின் விரும்புவதால் தற்போது இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தேவையில்லை என்று முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆகையால் அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களில் கொங்கு மண்டலத்தில் கைப்பற்ற வேண்டும் என்று திமுக முடிவெடுத்துள்ளதாக கூறுகின்றனர்.