




திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் 67- வது பிறந்த நாளை முன்னிட்டு எழும்பூர் தொகுதி 78 (அ) வது பகுதிச் செயலாளர் சொ. வேலு ஏற்பாட்டில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் செலவில் 300 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் அடங்கிய புத்தக பைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் எம்.பி மற்றும் திமுக வட சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏவுமான சேகர்பாபு, துரை.கி.சரவணன் எம்.எல்.ஏ, எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ ரவிச்சந்திரன், திமுக நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கி பேசிய தயாநிதி மாறன் எம்.பி, திமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு என நிறைய திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. ஏழை மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தது திமுக தான். அதேபோல் 5 மற்றும் 8- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற அரசின் முடிவை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தது திமுக தலைவர் ஸ்டாலின் தான். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே தமிழை வளர்த்தது திமுக தான். ஆகையால் நீங்கள் எப்பொழுதும் திமுக தலைவர் ஸ்டாலினை நினைவில் வைத்து கொள்ள வேண்டும், மறந்து விடக்கூடாது. நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறுங்கள் என்றதும், மாணவ, மாணவிகள் சத்தமாக ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறினர்.