தி.மு.க. தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், "கரோனா பேரிடர் காலத்தில் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசு, அவர்களைப் பல வகைகளிலும் வதைத்ததுடன், வழக்கும் போட்டுத் துன்புறுத்தியதை அப்போதே சுட்டிக்காட்டியிருந்தேன். இந்த வழக்குகளால் இளைஞர்களின் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான பயணம் உள்ளிட்ட பல வாழ்வாதாரச் சிக்கல்கள் ஏற்பட்டு வருவதைக் கடந்த ஜனவரி மாதமே விரிவாக எடுத்துரைத்த போதும், அலட்சியம் காட்டிய அ.தி.மு.க. அரசின் முதலமைச்சர் பழனிசாமி, இப்போது தேர்தல் நெருங்கிவருகிறது என்றதும் வழக்குகள் வாபஸ் என அறிவித்திருக்கிறார். சி.ஏ.ஏ.வை எதிர்த்துப் போராடியவர்கள் மீதான வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்றும், கூடங்குளம் அணுமின் நிலையப் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவது குறித்தும் சட்டத்திற்கு உட்பட்டுப் பரிசீலிக்கப்படும் எனவும் தனது பரப்புரையில் வரிசையாக அறிவித்திருக்கிறார்.
முதலமைச்சரின் முதலைக் கண்ணீரைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள் என்றபோதும், தி.மு.க. முன்வைத்த கோரிக்கையைக் காலந்தாழ்த்தியேனும் நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்த அரசு உள்ளது. வெற்று அறிவிப்பாக இல்லாமல் விரைந்து நிறைவேற்ற வலியுறுத்துகிறேன்!" என்று குறிப்பிட்டுள்ளார்.