
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மூத்த தலைவரும் மறைந்த திருமகன் ஈ.வெ.ராவின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகின்றார். இதனையொட்டி திமுகவின் கூட்டணிக் கட்சிகள் இடைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதேபோன்று அதிமுக சார்பாக பழனிசாமி தரப்பும், பன்னீர்செல்வம் தரப்பும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க 11 அமைச்சர்கள் கொண்ட தேர்தல் பணிக்குழு ஒன்றை திமுக தலைமைக் கழகம் நேற்று அறிவித்துள்ளது. இந்த குழுவில் அமைச்சர்கள் கே.ஏன்.நேரு, முத்துசாமி, எ.வ.வேலு, கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன், சக்கரபாணி, மு.பெ. சாமிநாதன், செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கயல்விழி செல்வராஜ், முன்னாள் அமைச்சர்களான அந்தியூர் செல்வராஜ், டி.எம்.செல்வகணபதி, மற்றும் கட்சி நிர்வாகிகளான கே.ஆர்.என். ராஜேஷ்குமார் எம்பி, கோவை நா.கார்த்திக், தளபதி முருகேசன், தொ,அ.ரவி, வசந்தம் கார்த்திகேயன், தா.உதயசூரியன், எஸ்.ஆர்.சிவலிங்கம், என். நல்லசிவம், பத்மநாபன், முபாரக், மதியழகன், எஸ்.எம். மதுரா செந்தில், பழனியப்பன், ஒய். பிரகாஷ், திருப்பூர் செல்வராஜ், ஐ.பி.செந்தில்குமார், தடங்கம் சுப்ரமணியம் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளர் அறிவிப்பதற்கு முன்பாகவே அமைச்சர்களான முத்துசாமி, கே.என். நேரு ஆகியோர் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக கை சின்னத்தில் வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.