நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 18 இல் இருந்து 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த சிறப்பு கூட்டத் தொடரில் 5 அமர்வுகள் நடைபெற உள்ளன. 'ஒரே நாடு ஒரு தேர்தல்' என்பதற்கான சட்டத் திருத்தங்களை இந்த சிறப்புக் கூட்டத்தில் கொண்டு வருவார்கள் என்ற வியூகங்கள் கிளம்பியுள்ளது. அதுமட்டுமின்றி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் இந்தியா என்ற நம் நாட்டின் பெயரைப் பாரதம் என மாற்றி பாஜக அரசு தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதுமட்டுமின்றி செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடரின் முதல் அமர்வு பழைய நாடாளுமன்றத்தின் கட்டடத்தில் நடைபெறும் எனவும், செப்டம்பர் 19 ஆம் தேதியில் இருந்து 22 ஆம் தேதி வரை நடைபெறும் 4 அமர்வுகள் புதிய நாடாளுமன்ற கட்டத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை முன்னிட்டு நாளை (செப்டம்பர் 17) நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அரசியல் கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்து.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.