இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பிப்ரவரி 18- ஆம் தேதி அன்று மதுரையில் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிப் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்த மாநாட்டில், தமிழகம் முழுவதும் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
மாநாட்டில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், "தொழிலாளர்களின் தோழனாகவும், பாட்டாளிகளின் பாதுகாவலனாகவும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் பேச வாய்ப்பளித்தமைக்கு நன்றி. இது இந்திய கம்யூனிஸ்ட் மாநாடாக இருந்தாலும் தி.மு.க. மாநாட்டில் கலந்துகொள்வது போன்ற அதே உணர்வோடு உள்ளேன்.
சோவியத் ஸ்டாலின் இல்லாமல் கம்யூனிச தத்துவம் எப்படி இருக்க முடியாதோ, அதேபோல தான் இந்த ஸ்டாலின் இல்லாமல் கம்யூனிஸ்ட் மாநாடு நடத்த முடியாது என்கிற உணர்வோடு என்னை அழைத்திருக்கீறிர்கள். நாம் ஒரே கொள்கையோடு உள்ளவர்கள் என்ற பாசத்தால் இங்கே ஒன்றிணைந்துள்ளோம். 'திராவிடக் கட்சி இல்லையனில் கம்யூனிசக் கட்சியை ஏற்றுக்கொண்டிருப்பேன்' என கலைஞர் கூறியுள்ளார். தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது கம்யூனிஸ்ட்களின் எண்ணத்தை நிறைவேற்றினோம். அதேநிலை, வரும் தி.மு.க. ஆட்சியிலும் தொடரும்.
வரும் தேர்தல், லட்சியத்திற்கான, ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல், கொள்ளைக் கூட்டத்திடம் இருக்கும் ஆட்சி, கொள்கை உடையோரிடம் வரவேண்டும். அ.தி.மு.க. மூலம் தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது பா.ஜ.க. தனது ஊழலை மறைக்க அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது. பிரதமர் மோடி, ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ்.-ன் கையை உயர்த்தியுள்ளார். ஊழல் கரங்களை உயர்த்தி ஊழலுக்கு உதவி செய்வதை வெளிப்படுத்தியுள்ளார்.
மோடியின் ஒரு கரம் காவி, மறு கரம் கார்ப்பரேட். அதோடு ஊழலையும் கரம் கோர்த்துள்ளார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைத்த மோடி, ஔவையார் பாடலைக் கூறலாமா? மோடி ஆட்சியில் ஆண்டுதோறும் மீனவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. மோடி ஆட்சியில் சொந்த நாட்டு மக்கள் மீதே பொருளாதாரத் தாக்குதல் நடக்கிறது. பெட்ரோல், டீசல் விலை, சமையல் கேஸ் விலை உயர்வுதான் மோடி அரசு தொடர்ந்து மக்களுக்குத் தரும் பரிசு. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையிலும் பெட்ரோல் விலை உயர்கிறது. பெட்ரோல் விலை உயர்வால் காய்கறி, போக்குவரத்துக் கட்டணம் என அனைத்துப் பொருட்களின் விலைவாசியும் உயர்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கூட தட்டிக்கேட்க முடியாத அரசாக உள்ளது மாநில அரசு. இந்த மாநில உரிமைகளை தாரை வார்த்துவிட்டனர்; தாரை வார்க்கும் அரசாக இந்த அரசு உள்ளது. மதுரையில் 'எய்ம்ஸ்' மோடி அரசு மனதுவைத்தால் வரும் என்ற நிலை மாறி, இப்போது ஜப்பான் நிதி கொடுத்தால்தான் வரும் என்ற நிலை உருவாகியுள்ளது. மாநில அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு தரவில்லை. எடப்பாடி அரசை ஒரு அரசாகவே மத்திய அரசு மதிக்கவில்லை. வரும் தேர்தல் நிகழ்காலத்திற்கு அல்ல; எதிர்காலத்திற்கான முக்கியத் தேர்தல்.
அ.தி.மு.க.வைப் பயன்படுத்தி காலூன்றப் பார்க்கிறது பாஜக. அ.தி.மு.க.வைப் பயமுறுத்தி பா.ஜ.க. தன்னை பலப்படுத்தப் பார்க்கிறது. பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கும் அடிமை அரசுக்கும் பாடம் புகட்டும் தேர்தல் இது. பெரியார், அண்ணா, காமராஜர், தோழர் ஜீவா, கலைஞரின் தமிழ்நாடு இது என்பதை நிரூபிக்க வேண்டும்" என்றார்.