Skip to main content

“ஜெயலலிதா மரணத்தில் புகார் சொன்ன ஓ.பி.எஸ். இதுவரை விசாரணை கமிஷனில் ஆஜராகி விளக்கமளிக்கவில்லை” - மு.க.ஸ்டாலின்

Published on 29/12/2020 | Edited on 29/12/2020

 

DMK Leader MK Stalin speech in ranipet gramasaba meeting


இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஒன்றியத்துக்கு உட்பட்ட அனந்தலை ஊராட்சியில் தி.மு.க. நடத்தும் 'மக்கள் கிராமசபைக் கூட்டம்', டிசம்பர் 29ஆம் தேதி நடைபெற்றது. இதில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.


இந்தக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசும்போது, “மக்கள் கிராம சபைக் கூட்டத்தைக் கண்டு முதல்வர் எடப்பாடி பயப்படுகிறார். அதனால் தான் இதனைத் தடுக்க முயன்று தோற்றுள்ளார். இந்தக் கூட்டத்தை ஜனவரி 10ஆம் தேதியோடு முடித்துக்கொள்ள முடிவுசெய்தோம். இனி இன்னும் 10 நாட்கள் அதிகமாக நடத்தவுள்ளோம். வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வை ஆட்சிப் பொறுப்பில் அமரவைக்க, எங்களைவிட நீங்கள் உறுதியாக உள்ளீர்கள். தமிழகத்தை அடகு வைத்துவிட்டார்கள். சுயமரியாதையில்லாமல் காலில் விழுந்து பதவி வாங்கி, அதைக் காப்பாற்றிக்கொள்ள பிறர் காலில் விழுபவர்கள், நம்மையும் அப்படி மாற்றத் துடிக்கிறார்கள்.


நமது பணத்தில் கோடி கோடியாகச் செலவு செய்து, அ.தி.மு.க.வுக்கு விளம்பரம் செய்கிறார்கள். இதற்கெல்லாம், தி.மு.க. ஆட்சிவந்ததும், அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.


நமக்கும் ஜெயலலிதாவுக்கும் ஆகாதுதான். நாம் அந்தக் கட்சிக்கு வாக்களிக்கமாட்டோம். ஆனால், வாக்களிக்காத நமக்கும் அவர்தான் முதல்வர். முதல்வராக இருந்த அவர் மரணமடைந்துள்ளார். அந்த மரணத்தில் சந்தேகம் எழுப்பினார், இப்போதைய துணை முதல்வர் ஓ.பி.எஸ். அதற்காக, விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த விசாரணை கமிஷன் 3 வருடமாக விசாரணை நடத்திவருகிறது. புகார் சொன்ன ஓ.பி.எஸ்க்கு இதுவரை 8 முறை சம்மன் அனுப்பியும் இதுவரை ஆஜராகி விளக்கம் சொல்லவில்லை. ஆதாரத்தைத் தரவில்லை. முதல்வரான, அவர்களது கட்சிப் பொதுச்செயலாளருக்கே இந்த நிலைமை. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அதனைக் கண்டறியும்.

 

பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் தருவதை தி.மு.க. தடுப்பதாக ஆளும்கட்சி குற்றம்சாட்டுகிறது. நாங்கள் சத்தியமாக அதைத் தடுக்கவில்லை. ரூ.5 ஆயிரம் தரச்சொன்னோம், ஏன் 2,500 மட்டும் தருகிறீர்கள் என்றே கேள்வி எழுப்புகிறோம். அதனை அவர்கள் திசை திருப்புகிறார்கள்.

 

பின்னர் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களிடம் குறைகள் கேட்டவர், அந்த குறைகள் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் சரிச்செய்யப்படும் என அறிவித்தார். பின்னர், பிற கட்சிகளில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த, 200 பேரோடு பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

 

DMK Leader MK Stalin speech in ranipet gramasaba meeting


அனந்தலை கிராமத்தைச் சேர்ந்தவர்களைத் திரட்ட முடியாமல், அந்தக் கிராமத்துக்கு அருகில் உள்ள கிராமங்களில் இருந்தெல்லாம் ஆட்களை வேன்வைத்து அழைத்து வந்தார்கள். 30 வேன்கள், 3 லாரிகளில் ஆண்கள், பெண்கள் எனக் கிராம சபைக்கூட்டதுக்கு அழைத்து வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி அழைத்து வரப்பட்டவர்களுக்கு பணமும், உணவும் தந்தனர்.


காஞ்சிபுரம், மரக்காணத்தில் நடைபெற்ற மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் அதே ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்களைத் திரளாகக் கலந்துகொள்ள வைத்திருந்தனர் அந்தப் பகுதி தி.மு.க.வினர்.


 

 

சார்ந்த செய்திகள்