
நூற்றாண்டு விழா கண்ட சிவகாசி நகராட்சி, மாநகராட்சியான பிறகு முதல் தேர்தலைச் சந்திக்கிறது. 100 வருடங்களில் 95 வருடங்கள் காங்கிரஸ் வசம் இருந்ததாகச் சொல்லப்படும் இந்நகராட்சியை, 2011-2016ல் மட்டும் அதிமுக கைப்பற்றியிருந்தது. இந்நிலையில், இம்மாநகராட்சி எங்களுக்கே சொந்தம் என்ற பாரம்பரியச் சிந்தனை கதர்ச்சட்டைகள் மனதில் நிறைந்திருந்தது.
திமுகவோ, ‘அதுதான் காங்கிரஸுக்கென்று சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ. இருக்கிறாரே! மாநகராட்சியும் உங்களுக்கேவா? தமிழ்நாட்டு வாக்கு வங்கில நாங்க 37.7 சதவீதம், நீங்க 4.28 சதவீதம்.’ என்று கணக்கு பார்த்து, 48 வார்டுகளில் 32-ஐ எடுத்துக்கொண்டு, 12 வார்டுகளை மட்டுமே காங்கிரஸுக்கு ஒதுக்கியிருக்கிறது. அதனால், காங்கிரஸின் மேயர் கனவு கச்சிதமாக கலைக்கப்பட்டது.

ஆனாலும் கதர்ச்சட்டைகள், “சிவகாசி மாநகராட்சி நிலவரமே வேறு. நாடார் மற்றும் நாயக்கர் வாக்கு வங்கி கணிசமாக உள்ளது. திமுகவைக் காட்டிலும் பலமாக உள்ள காங்கிரஸ் பெல்ட் இது. முன்னாள் நகர்மன்றத்தலைவர் ‘சபையர்’ ஞானசேகரன், காங்கிரஸிலிருந்து திமுக பக்கம் சென்றபிறகு, அவர் மூலம் மா.செ. தங்கம் தென்னரசு வழிகாட்டலில், காங்கிரஸை கபளீகரம் செய்யும் வேலையைத் தொடங்கிவிட்டனர்.
மாணிக்கம் தாகூர் எம்.பி. பாராளுமன்றப் பணிகளில் பிசியாக இருக்கிறார். விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜா சொக்கரின் செயல்பாடு பெயரளவிலேயே இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் சிவகாசியிலும் திருத்தங்கல்லிலும் பல்லாயிரம் வாக்குகள் லீடிங் பெற்ற அசோகன் எம்.எல்.ஏ.வும், திமுகவினரின் தொடர்ச்சியான தலையீட்டால் திணறவே செய்கிறார்.

இதில் கொடுமை என்னவென்றால், ராஜேந்திரபாலாஜியுடனான லோக்கல் அட்ஜஸ்ட்மென்ட்டில் திருத்தங்கல்லில் தோற்பதற்கென்றே பலவீனமான திமுக வேட்பாளர்களைச் சில வார்டுகளில் நிறுத்தியிருக்கின்றனர். கணக்கை சரியாகச் சொல்வதென்றால், மேயர் நாற்காலியில் அதிமுக அமர்ந்தாலும்கூட பரவாயில்லை, சிவகாசி தொகுதி காங்கிரஸ் பெல்ட் என்ற நிலையை அடியோடு மாற்றிவிட வேண்டுமென்ற திட்டத்தோடு உள்ளனர். இப்படி நடந்துகொண்டால், வாக்களிக்கும்போது கூட்டணி தர்மம் கேள்விக்குறியாவதை யாரால் தடுக்கமுடியும்?” எனக் கேள்வி எழுப்புகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தல் என்றால் உள்ளடி இல்லாமலா?