Skip to main content

திமுக பொதுக்குழு ஒத்தி வைத்ததன் பரபரப்பு பின்னணி! 

Published on 26/09/2019 | Edited on 26/09/2019

முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட தி.மு.க. பொதுக்குழு, ஒத்தி வைக்கப்பட்டதன் பின்னணி பற்றி விசாரித்த போது, வரும் அக்டோபர் 6-ந் தேதி நடப்பதாக இருந்த தி.மு.க. பொதுக்குழு, அக்டோபர் 21-ல் நடக்க இருக்கும் நாங்குனேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுவில் கட்சிப் பொதுச்செயலாளர் பற்றிய ஒரு முக்கிய முடிவை எடுக்க தி.மு.க. தலைமை இருந்ததாக சொல்லப்படுகிறது. அண்ணா மறைவுக்குப் பின் கலைஞர் கட்சியின் தலைவர் பதவியை ஏற்ற கொண்ட பிறகு, நாவலருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அவர் பொதுச் செயலாளராக நீடித்தார். நாவலருக்குப் பிறகு கலைஞரைவிட மூத்தவரான பேராசியர் அன்பழகன், தி.மு.க.வின் பொதுச் செயலாளர் பதவி ஏற்றார். 

 

dmk



கலைஞர் தன் கடைசி நாட்களில் செயல்பட முடியாமல் சிரமப்பட்ட போது, கட்சிக்கு செயல் தலைவர் பதவி உருவாக்கப்பட்டு, அதில் ஸ்டாலின் அமர்ந்து, தலைவருக்கான பணிகளை கவனிக்கும் வகையில் சட்டவிதிகள் திருத்தம் செய்யப்பட்டது. பின்பு கலைஞரின் மறைவுக்குப் பிறகு தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார். அதேபோல் முதுமை காரணமாக உடல் நலிவுற்றிருக்கும் கட்சியின் பொதுச்செயலாளரான பேராசிரியரால் திருவண்ணாமலை முப்பெரும் விழாவில் கலந்துக்க முடியவில்லை. இப்படிப்பட்ட நிலையில், அவரிடம் தலைமைக் கழக அறிவிப்புகளில் கையெழுத்துக் கேட்டு சிரமப்படுத்தக் கூடாது என்கிற எண்ணம் சீனியர்கள் எல்லோருக்கும் இருப்பதாக சொல்லப்படுகிறது.


அதனால் வாழ்நாள் முழுவதும், அவரே பொதுச் செயலாளர் பதவியில் தொடர்வார் என்றும், அவர் பொறுப்புகளை வேண்டுமானால் கட்சியின் அமைப்புச் செயலாளரோ அல்லது தலைவரோ பார்ப்பதற்கான வழிமுறைகளை, இந்தப் பொதுக்குழுவில் எடுக்கலாம் என்று கட்சித் தலைமை திட்டமிட்டிருந்தது. இப்போது பொதுக்குழு தள்ளி வைக்கப்பட்டாலும், தேர்தலுக்குப் பிறகு பொதுக்குழு கூட்டப்படும் போது, இதுபோல் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. 

சார்ந்த செய்திகள்