தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர், சமீபத்தில் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் என்னிடம் தொலைபேசியில் பேசினார். ‘நாங்கள் அ.தி.மு.க. கூட்டணிக்கு போகவில்லை. உங்களுடன் கூட்டணிக்கு வருகிறோம். எங்களுக்கு ‘சீட்’ கொடுத்து நீங்கள் ஆதரிக்க வேண்டும்’, என்றார். ‘ஏற்கனவே எல்லா ‘சீட்’களும் கொடுத்துவிட்டோமே... இப்போது வந்து ‘சீட்’ கேட்கிறீர்களே? எங்கள் தலைவர் (மு.க.ஸ்டாலின்) ஊரில் இல்லை. பார்க்கலாம்’ என்று கூறிவிட்டேன்.
இந்தநிலையில் தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ. முருகேசன் இன்று (நேற்று) என்னை சந்திக்க வந்தார். அவருடன் இன்னொருவரும் வந்தார். என்னுடன் ஜெகத்ரட்சகன் உடனிருந்தார். வந்தவர்கள் ‘தி.மு.க.வுடன் கூட்டணி வேண்டும்’ என்றனர். ‘ஏன், அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியே வர விரும்புகிறீர்கள்? இது அதிகாரப்பூர்வமாக எடுத்த முடிவா? அல்லது அதிருப்தியாளர்கள் எடுத்த முடிவா?’, என்று கேட்டேன்.
அப்போது, ‘கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. அங்கு உரிய மரியாதை இருக்காது. எனவே நாங்கள் தி.மு.க.வுடன் வருகிறோம்’, என்றனர்.
‘இது உங்கள் தலைவர் விஜயகாந்துக்கு தெரியுமா?’, என்றேன். ‘உங்கள் விருப்பம் தி.மு.க. வேண்டும் என்றால், அவர்களோடு பேசிவிட்டு வாருங்கள் என்று அவர்தான் கூறினார், அதனால் தான் நாங்கள் வந்திருக்கிறோம்’, என்றனர்.
அக்கட்சியின் மோகன்ராஜ் மற்றும் எல்.கே. சுதீஷ் ஆகியோரும் எனக்கு நல்ல நண்பர்கள். அவர்களும் இதுதொடர்பாக என்னிடம் பேசியிருக்கிறார்கள்.
என்னை சந்திக்க வந்தவர்கள் எடுத்திருக்கும் முடிவு நல்ல முடிவா? கெட்ட முடிவா? என்று எனக்கு தெரியாது. இருந்தாலும், ‘உங்களின் கவுரவத்தை காக்கும் அளவுக்கு எங்களிடம் சீட் இல்லையே... முன்பே வந்திருந்தால் உடன்பாடு செய்திருக்கலாம். எல்லாமே முடிந்துவிட்டது’, என்றேன். ‘இல்லை, இல்லை எப்படியாவது சீட் தாருங்கள்’ என்றனர்.
‘ஊரெல்லாம் அ.தி.மு.க. வுடன் கூட்டணி என்று அறிவித்துவிட்டு, இப்போது இங்கு வந்திருப்பது சரியா? ஒருநாள் ஒன்றும், மறுநாள் இன்னொன்றும் பேசிவரும் உங்களை எப்படி நம்புவது?’, என்றேன். ஆனால் அவர்கள் தொடர்ந்து வற்புறுத்தினர்.
‘எங்களிடம் இருந்த ‘சீட்’களை பங்கிட்டு கொடுத்துவிட்டோம். ஒருவேளை தி.மு.க. கூட்டணிக்கு வர தே.மு.தி.க. தொடர்ந்து முயற்சிக்கும் பட்சத்தில் சீட்டு உண்டா? இல்லையா? என்று சொல்லும் அதிகாரம் கட்சி தலைவருக்கே உண்டு. எந்த சூழ்நிலையிலும் பிற கட்சிகளிடம் கொடுத்த சீட்டுகளை திரும்பி வாங்க முடியாது. எங்களுக்கே தொகுதிகள் குறைவாகத்தான் கிடைத்திருக்கிறது.
எங்களிடம் இருக்கும் 20 சீட்களை மேலும் குறைக்கவும் விருப்பம் இல்லை. இதுகுறித்து முடிவு எடுக்கவேண்டியவர் எங்கள் கட்சி தலைவர். அவர் இப்போது ஊரில் இல்லை. ‘சீட்’ ஒதுக்கீடு குறித்து பேச எனக்கு எந்த அதிகாரம் இல்லை. மன்னித்து கொள்ளுங்கள்’ என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டேன்.
ஆனாலும் 45 நிமிடங்கள் தொடர்ந்து என்னிடம் அவர்கள் பேசி வற்புறுத்தி கொண்டே இருந்தனர். எனக்கே ஒருகட்டத்தில் சோர்வு ஏற்பட்டது. எனவே ‘முடியவே முடியாது’ என்று கூறி வந்துவிட்டேன்.
‘டெல்லியில் இருந்து மத்திய மந்திரி ஒருத்தர் அடிக்கடி என்னை போனில் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தைக்கு அழைத்து வருகிறார். ‘அவரிடம் முடியாது என்று சொல்லப்போகிறேன்’, என்று சுதீஷ் என்னிடம் தொலைபேசியில் கூறினார். ஆனால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேசி வருகிறோம்’ என்று இப்போது தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
இப்படி இருந்தால் நாங்கள் என்ன சொல்வது? அவர்களே உறுதியான நிலைப்பாட்டில் இல்லையே... என்னோடு அப்படி பேசிய சுதீஷ், மறுபடியும் அங்கே போய் வேறுமாதிரியாக பேசுவதை என்ன சொல்ல? இவரை நம்பி எப்படி பேச்சுவார்த்தைக்கு போவது? ஏதோ தவறு நடக்கிறது. அது மட்டும் உண்மை. இவ்வாறு கூறினார்.
இந்த சூழலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுதீஷ், அனகை முருகேசனும், இளங்கோவனும் தனிப்பட்ட காரணங்களுக்காக துரைமுருகனை சந்திக்க சென்றனர். ஒரே மாவட்டத்தை சேர்ந்த நானும், துரைமுருகனும் பலமுறை சந்தித்து அரசியல் தவிர பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி உள்ளோம். உள்ளே பேசுவதை வெளியே சொல்லும் பழக்கம் எங்களுக்கு கிடையாது. துரைமுருகன் என்னவெல்லாம் பேசினார் என்பதை நான் கூறட்டுமா? திமுக பற்றியும் திமுக தலைமை பற்றியும் என்னிடம் நிறைய பேசி உள்ளார்.
பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திட்ட போது எங்களுடைய தொகுதி பங்கீட்டை உறுதி செய்திருக்கலாம் என்பது எங்கள் வருத்தம். அ.தி.மு.க உடன் கூட்டணி முடிவாகி விட்டது. இரண்டொரு நாளில் வெளியிடப்படும் என கூறினார்.
சுதீஷ் பேட்டி கொடுத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், தேமுதிகவினர் மாற்றி பேசுவார்கள் என்று நினைக்கவில்லை. தேமுதிக நிர்வாகிகள் தங்களை காப்பாற்றிக்கொள்ள இப்படி பேசுகிறார்கள். சுதீஷ் மீது எனக்கு மரியாதை உண்டு. அவர் இப்படி பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை. தேமுதிகவை பார்த்து பரிதாபபடுவதை தவிர வேறொன்றுமில்லை.
நேற்று என்னிடத்தில் தேமுதிக துணைத் தலைவர் மோகன்ராஜ் பேசினார். சுதீஷ் போன் பண்ணினார். யாரோ ஒரு மந்திரியை பார்த்துவிட்டு இல்லை என்று சொல்லிவிட்டு வருகிறேன் என்றார். சுதீஷும், மோகன்ராஜும் வருவார்கள் என்று வந்தேன். என்னோடு ராணிப்பேட்டை எம்எல்ஏ காந்தி, ஜெகத்ரட்சகன் இருந்தார்கள். இரண்டு பேர் வந்தார்கள். அவர்கள் யார் என்று எனக்கு தெரியாது. பிறகு முன்னாள் செங்கல்பட்டு எம்எல்ஏ முருகேசன் என்று சொன்னார்கள். அவருடன் ஒருவர் வந்தார். அவர் யார் என்று எனக்கு தெரியவில்லை. நிலைமையை சொன்னார்கள். எங்களிடம் சீட் இல்லை. இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டியது தலைவர்தான். தலைவர் ஊரில் இல்லை என்றோம். திரும்ப திரும்ப பேசினார்கள். சென்றுவிட்டார்கள். அவ்வளவுதான்.
சுதீஷ் உங்களிடம் பேசவில்லை என்று மறுக்கிறாரே?
சுதீஷ் என்னோடு பேசினார். அவர் மீது நான் மரியாதை வைத்துள்ளவன். எங்க ஊர்காரர். அவரே இப்படி பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு என்னவென்றால் நேற்று ஒரு நிர்பந்தம் ஏற்பட்டது. இங்கேயும் இல்ல, அங்கேயும் இல்ல. இந்த பழியில் இருந்து தப்பிக்க நினைக்கிறார்கள். என்கிட்ட தனிப்பட்ட முறையில் அனகை முருகேசன் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. எனக்கு அவரை தெரியாது. என்னிடம் என்ன பேசப்போகிறார். இந்த சந்திப்பின்போது நான் மட்டும் இல்லை. காந்தி, ஜெகத்ரட்சகன் உடனிருந்தனர்.
நேற்றே என்னை சந்திக்க வந்தபோது நான் அரசியல் பேச வரவில்லை என்று செய்தியாளர்களிடம் சொல்லியிருக்கலாம். இன்று அவர்கள் இதனை சொல்லுகிறார்கள். பாவம் அவர்கள் நிலையை பார்த்து பரிதாபப்படுகிறேன் என்று சொல்வதைத்தவிர வேறு எதுவும் சொல்ல முடியாது.
அதிமுகவுடன் கூட்டணி முடியும் நேரத்தில் திடீரென திமுகவுடன் பேசுவது என்ன நிலை? அவர்களுடைய பேச்சுவார்த்தைகள் நியாயமானதுதானா?
அதைப்பற்றி நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஆனால் ஒன்று கேட்டேன். ஏன் நீங்கள் திடீரென எங்கள் பக்கம் வரணும். என்ன காரணம் என்று கேட்டேன். அதற்கு முருகேசன், மேலே இருப்பவர்கள் அதிமுகவுடன் போக வேண்டும் என்று முடிவு செய்தார்கள். ஆனால் மாவட்டச் செயலளார்கள் கூட்டத்தில் திமுகவுக்கு போக வேண்டும் என்று சொன்னார்கள். உங்க தலைவருக்கு தெரியுமா என்று கேட்டேன். தலைவர்தான் அனுப்பி வைத்தார் என்றார்கள்.
சுதீஷ் என்னிடம் பேசினார். அக்கட்சியின் துணைத் தலைவரும் பேசினார். அவர்கள் வருவதாக சொன்னார்கள். அதற்குள் இவர்கள் வந்துவிட்டார்கள். எனக்கு அனகை முருகேசனை தெரியாது. தனிப்பட்ட முறையில் பேசுவதற்கு அவரிடம் என்ன இருக்கிறது. நேற்று என்னிடம் சுதீஷ் பேசினார். இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த துரைமுருகன், எங்களுடைய தோழமை கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டது. இனி முடிவு எடுக்க வேண்டியது எங்கள் கட்சித் தலைவர்தான் என்றார்.‘
உள்ளே பேசியதை வெளியே சொல்லும் பழக்கம் தங்களுக்கு இல்லை என்று சுதீஷ் கூறியிருக்கிறாரே?
அதிமுகவிடம் போய் ஒட்டிக்கொள்வதற்காக என்னைப்பற்றி குறை சொல்லுகிறார்கள் அவ்வளவுதான்.
கூட்டணி கதவுகள் சாத்தப்பட்டது என்பதால் உங்கள் மீது சேற்றை வாரி இறைப்பதாக நினைக்கிறீர்களா?
அவர்கள் மிகவும் நொந்துபோய் உள்ளார்கள். இதற்கு மேல் நான் அவர்களை புன்படுத்த விரும்பவில்லை. இவ்வாறு கூறினார்.