கள்ளச்சாராயம் குடித்துவிட்டு 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, 30க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். அவர்களை நேரில் சந்தித்து முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் அதிமுக விழுப்புரம் மாவட்டச் செயலாளரும் ராஜ்யசபா எம்.பியுமான சி.வி.சண்முகம் ஆறுதல் கூறினார்.
அதன் பின்னர் பத்திரிகை மற்றும் ஊடகத்தினரிடம் பேசுகையில், "திமுக ஆட்சி தான் கள்ளச்சாராய விற்பனையை தொடர்ந்து அமோகமாக நடத்தி வருகிறது. இதை நாங்கள் பலமுறை கூறி எச்சரித்துள்ளோம். இப்போது கள்ளச்சாராயத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மாவட்டத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா, அபின், குட்கா, கஞ்சா சாக்லேட் போன்றவை தடையின்றி கிடைக்கிறது. இதனால் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பல தரப்பினரும் சீரழிந்து வருகிறார்கள்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் திமுகவின் இரண்டு ஆண்டு சாதனை தமிழகத்தை போதை மாநிலமாக மாற்றியது தான். திமுக கவுன்சிலரின் கணவர் ஒருவர் மூன்று முறை கள்ளச்சாராய விற்பனை செய்ததற்காக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர், 20 நாட்களுக்கு முன்பு 5000 லிட்டர் கள்ளச்சாராயம் தயாரித்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சமீபத்தில் வெளிவந்துள்ளார். அந்த திமுக கவுன்சிலரின் கணவர் விற்பனை செய்த கள்ளச்சாராயத்தை குடித்து தான் தற்போது பலர் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களுக்கு போலீஸ் துணை போகிறது. அப்படிப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும். இதை திமுக தலைமையிலான அரசு செய்யத் தவறினால் அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்" என்று கூறினார்.
அப்போது முன்னாள் அமைச்சர் சண்முகத்துடன் எம்.எல்.ஏக்கள் சக்கரபாணி, அர்ஜுனன் முன்னாள் எம்.எல்.ஏக்கள் முத்தமிழ், செல்வன் விழுப்புரம் நகர செயலாளர் பசுபதி, ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், சுரேஷ் பாபு, முருகன், பன்னீர்செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.