வரும் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூடவுள்ள நிலையில், அதிமுக வட்டாரத்தில் ஒற்றைத்தலைமை கோரிக்கை வலுத்துவருகிறது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதிய நிலையில், பொதுக்குழுவை நடத்தும் முடிவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே பொதுக்குழுவிற்கு பாதுகாப்பு கோரி அதிமுக முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பெஞ்சமின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சதிஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பொதுக்குழுவை நடத்தும் ஓபிஎஸ், ஈபிஎஸ்தான் பாதுகாப்பு கோரி வழக்கு தொடுக்க வேண்டும் என்றும் பெஞ்சமின் தொடர்ந்த இந்த வழக்கானது விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் வாதிட்டனர்.
அப்போது காவல்துறை தரப்பில், பெஞ்சமின் தொடுத்த வழக்கின் மீது 26 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் அதற்கு தற்போதுவரை பெஞ்சமின் தரப்பிலிருந்து பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இன்று மதியம் 1 மணிக்குள் காவல்துறையின் 26 கேள்விகளுக்கு பெஞ்சமின் தரப்பினர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், இரு தரப்பினரது கோரிக்கையையும் முறையாக பரிசீலித்து இந்த விவகாரத்தில் நடுநிலைமையுடன் காவல்துறை செயல்பட வேண்டும் என உத்தரவிட்டு, இந்த வழக்கானது முடித்துவைக்கப்பட்டது.