அதிமுக ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் ஊழல் நடந்துள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவக்கல்லூரி என்ற அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில் கிருஷ்ணகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி உட்பட 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளை எழுப்பி அனைத்துக் கல்லூரிகளிலும் தலா 150 மாணவர்கள் படிக்கும் வசதியை ஏற்படுத்த கடந்த அதிமுக ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக வழக்குத் தொடுத்த ராஜசேகரன் சுட்டிக் காட்டியுள்ளார்.
மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு மத்திய அரசு 60% நிதியும், மாநில அரசு 40% நிதியும் ஒதுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மருத்துவக் கல்லூரிக்காகக் கட்டப்படும் இந்தக் கட்டிடங்கள் தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி கட்டியிருக்க வேண்டும். ஆனால், கட்டிடங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டுக் கட்டப்படவில்லை.
மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு உண்டான அரசாணை அடிப்படையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளவில்லை. குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கட்டிடங்களின் பரப்பளவு குறித்து அரசாணையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதற்கு மாறாகக் கட்டப்பட்ட கட்டிடங்கள் அனுமதிக்கப்பட்ட பரப்பளவை விடக் குறைவான அளவில் கட்டப்பட்டுள்ளது. முறைகேடாகக் கட்டிடங்கள் கட்டியதில் அரசிற்குப் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிய அளவில் நிதியைப் பெற்றுவிட்டுச் சரியான அளவில் மருத்துவக் கல்லூரி கட்டவில்லை என்றும் அதேபோல் தான் பிற மாவட்டங்களிலும் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். இவ்வழக்கில் மருத்துவக் கல்லூரி பணிகள் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டது தொடர்பாகவும் முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் முன்னாள் முதல்வராகவும் செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கும் தொடர்பு இருப்பதாக அந்த மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாகத் தமிழக அரசின் ஊழல் கண்காணிப்பு துறைத் தலைவருக்குப் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் சிபிஐ விசாரணை வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது அலி ஜின்னா ஆஜராகி, இந்தப் புகாரில் முகாந்திரம் உள்ளதாகவும் அரசு ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.