இந்தாண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர்.
அதே சமயம் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்குவது, தேர்தல் பணிகளை மேற்கொள்வது குறித்தும் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டுக்கான தேர்தல் குழுவை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார். அதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையிலான இந்த குழுவில் 35 பேர் இடம் பிடித்துள்ளனர். இந்த குழுவின் தலைவராக கே.எஸ். அழகிரி செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த குழுவில் ப.சிதம்பரம், செல்வப் பெருந்தகை, குமரி அனந்தன், தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த், பீட்டர் அல்போன்ஸ், சுதர்சன நாச்சியப்பன், செல்லகுமார், மாணிக்கம் தாகூர் ஆகியோர் தேர்தல் குழுவில் இடம் பெற்றுள்ளனர்