கர்நாடகாவில் மே மாதம் 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியும் 224 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து கர்நாடக தேர்தல் களத்தில் குதித்துள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும் இருக்கும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும். வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களில் உள்ள உறுப்பினர்களுக்கு தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். வேலையில்லா பட்டதாரிகளுக்கு இரண்டு வருடத்திற்கு மாதம் 3000 ரூபாய் நிதியுதவி, டிப்ளமோ முடித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு இரண்டு வருடத்திற்கு மாதம் 1500 ரூபாய் நிதியுதவி, கர்நாடக மாநில முழுவதும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி. பஜ்ரங் தள், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற மதம், சாதி சார்ந்து வெறுப்பை விதைக்க முயலும் அமைப்புகளுக்குத் தடை விதிக்கப்படும் உள்ளிட்டவற்றை அறிவித்தது.
இந்நிலையில் பஜ்ரங் தள் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளரான நீரஜ் தோனரியா இதற்கு தனது கண்டத்தை தெரிவித்துள்ளார். மேலும் பஜ்ரங் தள், காங்கிரஸை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நீரஜ் தோனரியா தெரிவித்திருப்பதாவது; “காங்கிரஸ் கட்சி கர்நாடகாவுக்கான தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் பஜ்ரங் தள் அமைப்பை பி.எஃப்.ஐ உடன் தொடர்புப்படுத்தியுள்ளது. சமூகத்தின் வளர்ச்சிக்காகவும், நலனுக்காகவும் பாடுபடும் பஜ்ரங் தள் அமைப்பை பல பயங்கரவாத செயல்களை ஊக்குவித்த குழுவுடன் ஒப்பிடுவது மிகவும் வெட்கக்கேடானது.
எங்களை தடை செய்து அவர்கள் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறுவதற்கு முயற்சிக்கின்றனர். மதத்தின் பெயரால் அவர்கள் எப்போதும் சமூகத்தைப் பிரித்து வருகின்றனர். பஜ்ரங் தள், காங்கிரஸை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.