அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பம் இப்பொழுது ஏற்பட்டது அல்ல. அது ஜெயலலிதா மறைவிற்குப் பின் ஏற்பட்டது என காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் கூறியுள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தல் களம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யத் துவங்கியுள்ளனர். நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் மாலை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக வேட்பாளர் இளங்கோவன், “திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளராக உள்ள நான் கை சின்னத்தில் வெற்றி பெற முடியும். விசைத்தறியாளர்கள் பிரச்சனைகளை கண்டிப்பாக தீர்த்து வைப்பார்கள். தேர்தல் நேரம் என்பதால் இத்திட்டத்தைப் பற்றி அமைச்சரால் கூற முடியாது. அதிமுகவில் உள்ள குழப்பம் இப்போது ஏற்பட்டது அல்ல. ஜெயலலிதா மறைந்த உடன் ஏற்பட்டது. இது தீராத குழப்பம் தீர்க்க முடியாத குழப்பம்” எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “வேட்பாளர் இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்த பின் முதல் பிரச்சாரமாக வார்டு எண் 17ல் துவங்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் போலி வாக்காளர் என்ற கருத்தை பார்த்தேன். குறிப்பாக 2021 சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் பொழுது ஈரோடு கிழக்கு தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 28 ஆயிரத்து 959 பேர். இப்பொழுது ஜனவரி மாதம் வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் எண்ணிக்கை 2 லட்சத்து 28 ஆயிரத்து 858 பேர். ஏறத்தாழ 68 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது. இதில் எங்கு போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். எவ்வளவு வாக்கு உள்ளது. போன தேர்தலில் எவ்வளவு வாக்குகள் இருந்தது. மொத்தம் எவ்வளவு வாக்குகள் வித்தியாசம் என்பது கூடத் தெரியாமல் தேர்தலுக்கு பின் கிடைக்கும் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் தேர்தலுக்கு முன்பே இதுபோன்ற கருத்துகளை முன் வைத்துள்ளார்கள். தேர்தல் என்பது மிக நேர்மையாக நடந்து வருகிறது” என்றார்.