
மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் அவரது கட்சியினர் நேற்று கொண்டாடினர். அதன்படி கள்ளக்குறிச்சி நகரச் செயலாளர் பாபு தலைமையில், மாவட்டச் செயலாளர் குமரகுரு, கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார், முன்னாள் நகரமன்றத் தலைவர் பாலகிருஷ்ணன், சுப்ரமணியன், ஜெயமுருகன், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் குமரகுரு, கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கிய பிறகு அன்னதானம் வழங்கினார். அப்போது பாலகிருஷ்ணனை அங்கிருந்த அதிமுகவினர் சிலர் வெளியேறுமாறு தெரிவித்துள்ளனர்.
நடந்து முடிந்த நகராட்சித் தேர்தலில் சில வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் தோல்வி அடைந்ததற்கான உள்ளடி வேலையை அதிமுக நிர்வாகிகள் செய்ததாகவும் அதனை கேள்வி கேட்டபோது, பாகிருஷ்ணனை அங்கிருந்து அப்புறபடுத்தியதாகவும் பாலகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் நடந்த போது அருகிலிருந்த மாவட்டச் செயலாளர் குமரகுரு, நிர்வாகிகளிடம் சமாதானம் செய்துள்ளார். மேலும், பொது இடத்தில் உள்கட்சி பிரச்சனை குறித்து வாக்குவாதம் செய்யக்கூடாது. கட்சி அலுவலகத்தில் வைத்து பேசித் தீர்த்து கொள்ளலாம் என்று சமாதானம் செய்துள்ளார்.
இதுகுறித்து அதிமுகவினர் சிலரிடம் பேசியபோது, ‘மாவட்டச் செயலாளர் குமரகுரு, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளருக்கு சீட்டு கிடைக்க செய்யாமல் உள்குத்து வேலை செய்ததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி தவிர மற்ற தொகுதிகள் அனைத்திலும் அதிமுக தோல்வியைச் சந்தித்தது.
அதேபோல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களைத் தேர்வு செய்யவில்லை. திறமையாக கட்சிப் பணி செய்பவர்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நிற்பதற்கு வாய்ப்பு தரவில்லை. அப்படி நின்றவர்கள் வெற்றி பெறுவதற்கு மாவட்டச் செயலாளர் பெரிய அளவில் முயற்சி எடுக்கவில்லை. அதற்கு உதாரணம் வடக்கநந்தல் பேரூராட்சியை திமுக வெகு சுலபமாக கைப்பற்றியது. அங்கே திமுகவிற்கு அதிமுகவினர் விலை போனவர்களைப் பற்றி எல்லாம் மாவட்டச் செயலாளர் சிறிதும் கவலைப்படவில்லை’ என்கிறார்கள் அதிமுக நடுநிலையான தொண்டர்கள்.