Skip to main content

"பாஜக காங்கிரஸ் கட்சியைக் கண்டு பயப்படுகிறது" - முதல்வர் பூபேஷ் பாகல் 

Published on 21/02/2023 | Edited on 21/02/2023

 

chhattisgarh cm bhupesh baghel talks about ed searching  

 

சட்டிஸ்கர் மாநிலத்தில் நிலக்கரி வரி ஊழல் மற்றும் பண மோசடி  வழக்கு குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி  வரும் நிலையில், சட்டிஸ்கர் மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்களுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

 

பிலாய் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தேவேந்திர யாதவ், சட்டிஸ்கர் மாநில காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ராம் கோபால் அகர்வால் உள்ளிட்ட  இன்னும் சிலருக்கு சொந்தமான இடங்களில் நேற்று காலை முதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது.  விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் இந்த சோதனை குறித்து தெரிவிக்கையில், "வழக்கு தொடர்பாக ஊழல் மற்றும் பண மோசடியால் பயனடைந்தவர்கள் என்ற அடிப்படையில் சோதனை மேற்கொண்டதாக தெரிவித்தனர்.

 

சட்டிஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் அமலாக்கத்துறையினர் சோதனை குறித்து தெரிவிக்கையில், "காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொள்வது அரசியல் உள்நோக்கம் கொண்டது. காங்கிரஸ் கட்சி ஏதாவது முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளும் போது எல்லாம் இது போன்ற சோதனை நடத்தப்படுகிறது. பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு காங்கிரஸ் கட்சியை கண்டு பயப்படுகிறது. ராகுல்கந்தி இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டபோது பதற்றமடைந்த பாஜக தற்போது ராய்ப்பூரில் நடைபெற உள்ள தேசிய மாநாட்டை கண்டு அச்சம் அடைந்துள்ளது. எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக ஒன்றிய அரசு பல்வேறு ஒன்றிய அமைப்புகளை தொடர்ந்து தவறாக பயன்படுத்தி வருகிறது" என்றார்.  காங்கிரஸ் கட்சி பிரமுகர்களின் வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையானது காங்கிரஸ் கட்சியினர் மற்றும் சட்டீஸ்கர் மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்