
நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 20) நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் தொடங்கி வைத்தார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ஆளுநர் ஆர்.என். ரவிக்கு ஒரு சவால் விடுகிறேன். அவர் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழகத்தில் ஏதோ ஒரு தொகுதியில் தேர்தலில் நிற்க முடிவு செய்யுங்கள். அங்கே திமுகவின் கடைக்கோடி தொண்டர் ஒருவரை நிற்க வைக்கிறோம். உங்களால் வெற்றிபெற முடியுமென்றால் அப்போது மக்களைச் சந்தியுங்கள்” எனப் பேசியிருந்தார்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ எனும் பெயரில் மேற்கொண்ட முதற்கட்ட நடைப்பயணம் இன்றுடன் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ஆளுநர் பதவி அரசியல் சார்பற்றது. ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் போட்டியிட வாருங்கள் என உதயநிதி ஸ்டாலின் கூறுகிறார். ஆளுநரை தேர்தலில் போட்டியிட சொல்லும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் குரூப் - 4 தேர்வு எழுத முடியுமா. உதயநிதி ஸ்டாலின் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் பாஸ் செய்யட்டும். நான் அரசியலை விட்டே ஒதுங்கி விடுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.