இன்னும் 10 நாட்களில் தேர்தலை சந்திக்க இருக்கும் விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் ஜூரம் உச்சகட்டத்தில் இருக்கிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடித்திருந்தாலும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் இலை காணாமல் போக, விக்கிரவாண்டி உள்ளிட்ட பல தொகுதிகளில் சூரியன் உதித்திருந்தது. இதற்கிடையே திமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி சில மாதங்களுக்கு முன் உடல் நிலைக்காரணமாக மரணமடைந்தார்.
மூன்று மாதங்களுக்கு மேலாக காலியாக இருந்த இந்த தொகுதிக்கு வேலூர் மக்களைவை தொகுதியுடன் சேர்த்தே தேர்தல் நடத்தப்படும் என்று பார்க்கப்பட்ட நிலையில், அப்போது வேலூர் தேர்தல் தேதி மட்டும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை கடந்த மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அறிவிப்பு வெளியான சில தினங்களிலேயே ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி தலைமைகள் பிரச்சாரத்தை முடிக்கிவிட்டுள்ளது. சீன அதிபர் பயணத்துக்கு பிறகு முதல்வர் பிரச்சாரம் செய்ய உள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் நாங்குநேரியில் முதற்கட்ட பிரச்சாரத்தை முடித்துள்ளார். அதிமுக தரப்பில் 15க்கும் மேற்பட்ட அமைச்சர் படை விக்கிரவாண்டியை சுற்றி வருகிறது. 100க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்களும் அதிமுகவிற்காக கடுமையாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
கடந்த தேர்தலில் தனியாக நின்ற பாமக 40,000 வாக்குகள் வாங்கிய நிலையில், அந்த வாக்குகள் முழுவதுமாக அதிமுகவுக்கு வந்து சேரும் என்று நம்புகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். 2014 தேர்தலில் தனியாக தருமபுரியில் வெற்றிபெற முடிந்த அன்புமணியால் கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற முடியவில்லையே? என்றால் இது 'இடைத்தேர்தல்' என்று கமுக்கமாக சிரிக்கிறார்கள் அண்ணா திமுக நிர்வாகிகள்.
சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற 22 தொகுதி இடைதேர்தலை நியாபகப்படுத்தினால், சார் அது மக்களவை தேர்தலின் போது நடந்தது என்று சொல்லிக்கொண்டே நம்மை கடந்து செல்கிறார்கள். இவர்களின் எண்ணம்தான் என்ன? என்று அதிமுக நிர்வாகிகளிடம் நாம் பேசியபோது பல அதிர்ச்சிகரமான தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார்கள்.
அதில், " விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளை முதல்வர் ஒரு சட்டமன்ற இடைத்தேர்தலாக நினைக்கவில்லை. தன்னுடைய ஆட்சிக்கு மக்கள் போடும் மார்க்காக பார்க்கிறார். தான் அதிக மார்க் எடுக்கவில்லை என்றாலும், திமுக தன்னை விட குறைவான மதிப்பெண்ணை எடுக்க வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை போட்டுள்ளார். அந்த வகையில், விக்கிரவாண்டி தொகுதியின் சந்துபொந்துகளை கூட நன்கு அறிந்து வைத்துள்ள சண்முகத்திடம் விக்கிரவாண்டி தொகுதிக்கான தேர்தல் பொறுப்பை கொடுத்துள்ளார். பாமக வாக்குகளை திமுக யாரை வைத்து சமாதானம் பேசினாலும் அதிமுகவிற்கு வருவதை தடுக்க முடியாது. ஏனென்றால் சில மாதங்களாக பாமக தலைமைக்கும், திமுக தரப்புக்கும் நடக்கும் சண்டை உலகறிந்த ஒன்று. எனவே பாமகவின் வாக்குகளை வன்னிய பிரதிநிதிகளை வைத்து வளைத்து போடலாம் என்ற திமுகவின் கனவு கானல் நீராகத்தான் போக போகிறது. அதிமுகவின் மற்ற கூட்டணி கட்சியினருக்கு அங்கு போதுமான அளவு வாக்கு பலம் இல்லை என்றாலும், பாமக அதிமுகவை காப்பாற்றும் என்று நாங்கள் நம்புகிறோம். இதனை தெரிந்து கொண்டதால்தான், வன்னிய வாக்குகளை மடைமாற்ற இன்று திமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதற்கு ராமதாஸும் பதில் அளித்துள்ளார். மாவட்டத்தில் உள்ள மூன்று மாவட்டச் செயலாளர்களில் ஒருவர் கூட வன்னியர் இல்லை.
மாவட்ட செயலாளர் நியமனத்திலேயே வன்னியர்களுக்கு இடம் தராத திமுக, அரசாங்க வேலைவாய்ப்பில் எப்படி இடம் தரும் என்ற கேள்வி அனைவரிடமும் தற்போது எழுந்துள்ளது. எனவே திமுகவின் அறிவிப்பு தேர்தல் களத்தில் பயன்தராது, அதிமுக 20000 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும். நாங்குநேரியை பொறுத்துவரையில் அதற்கு நாங்கள் வேறு பார்முலா வைத்துள்ளோம். புதிய தமிழகம் ஆதரவு கொடுக்கவில்லை என்றாலும், அந்த வாக்குகளை எப்படி அறுவடை செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். கொஞ்சம் ரெஸ்க் எடுத்து களத்தில் இறங்கினால் காங்கிரஸை களத்தில் இருந்தே காணாமல் போக செய்யும் வல்லமை அதிமுகவிற்கு இருக்கிறது" என்றார்.
அதிமுக தரப்பில் நிலைமை இப்படி என்றால் விக்கிரவாண்டியில் திமுக வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதில் தவறு நிகழும் பட்சத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றி மோடி எதிர்ப்பலையில் கிடைத்த ஒன்று, அதிமுக பாஜக இல்லாமல் தனித்து நின்றிருந்தால் அவர்களே வெற்றிபெற்றிருப்பார்கள் என்ற செய்தி உடனடியாக பரப்பப்படும். இது இன்னும் 15 மாதங்களில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கும் திமுகவிற்கு பின்னடைவை கொடுக்கும். எனவே இதனை நன்கு உணர்ந்ததாலோ என்னவோ இத்தொகுதி மீது திமுக தலைமை அதீத அக்கறை காட்டி வருகிறது.
அதன் உச்சபட்சமாக, " திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பை திமுக தலைமை வெளியிட்டுள்ளது. அதுதொடர்பான கோரிக்கை எதுவும் எழாத நிலையில், அதற்கான அவசியம் எங்கு வந்தது என்ற வினாவும் அரசியல் அரங்கில் திமுக தரப்பை பார்த்து அதிமுக எழுப்பி வருகிறது.
இதுதொடர்பாக திமுக பிரமுகரிடம் பேசியபோது, "பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்றால் அவரை போல ஸ்டாலினுக்கு ஓய்வு இல்லை. காலையில் ஆரம்பித்து இரவு வரை திமுகவை வம்பிழுக்கவே அவருக்கு நேரம் சரியாக இருக்கிறது. 2014 தேர்தலில் தனியாக தருமபுரியில் வெற்றிபெற முடிந்த அன்புமணியால் கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற முடியவில்லையே? பாமகவால் வெற்றிபெற முடியும் என்றால், அவர்களின் கோட்டை என்று சொல்லப்பட்ட தருமபுரியை ஏன் கோட்டை விட்டார்கள். வெற்று கூச்சல் இடுவதற்கு பாமகவை விட ஒரு சிறந்த கட்சி தமிழகத்தில் இன்னும் பிறக்கவில்லை.
மூன்று மாவட்ட செயலாளர்கள் பதவி இருந்தும் வன்னியருக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்று அவர் கூறுவது ஆடு நனைகிறதே என்று ஓநாய் வருத்தப்பட்ட கதைதான். கட்சி தொடங்கிய நாளில் இருந்து கூடவே இருக்கும் ஜி.கே மணியை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி, முதலில் அவர்கள் கட்சியில் அனைவருக்கும் பிரதிநிதித்துவம் இருக்கிறது என்று காட்டச் சொல்லுங்கள். வார்டு மெம்பரில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் வரை அவர் மகனே போட்டியிடுவார், அவரை தவிர வேறுயாரும் கட்சியில் இல்லையா? திமுகவில் வன்னியர் மாவட்டச் செயலாளர்கள் இல்லையா என்ன? நடந்து முடித்த நாடாளுமன்ற தேர்தலில் 5-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வன்னிய இன பிரதிநிதிகளை திமுக நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கவில்லையா? அதையும் தாண்டி தலைவர் ஸ்டாலின் அவர்கள் இந்த உள் ஒதுக்கீடு விவகாரத்தை தேர்தலுக்காக கையில் எடுக்கவில்லை. ஏற்கனவே கலைஞரால் கடந்த 2011ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் சொல்லப்பட்ட ஒன்றுதான். எங்களால் இரண்டு தேர்தலிலும் வெற்றிபெற முடியாத காரணத்தால் அதனை நிறைவேற்ற முடியவில்லை. எனவே தற்போது ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்கிறோம். இதில் எங்கே இருக்கிறது அரசியல்? விக்கிரவாண்டி திமுகவிற்கு கேரண்டி" என்றார் முடித்தார் அந்த நிர்வாகி.